பீகார் மாநிலத்தின் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலுக்கான முடிவு 23-ம் தேதி வெளியாகும். எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்களின் பிரசாரம் நடந்துவரும் நிலையில், ஜன் சூரஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தேர்தல் வியூகருமான பிரஷாந்த் கிஷோர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பெலகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், “நான் தேர்தல் பிரசாரங்களுக்கு எவ்வாறு நிதி திரட்டுகிறேன் என மக்கள் கேட்கிறார்கள்.
என்னுடைய பிரசாரத்திற்கு கூடாரங்கள், நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது, நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியுமா… நான் தேர்தல் வியூகம் அமைத்து ஆலோசனை வழங்குபவன். என்னுடைய ஆலோசனைக் கட்டணம் குறித்து பீகாரில் இருப்பவர்களுக்கு தெரியாது. ஆனால், என் ஆலோசனையின் அடிப்படையில் இந்தியாவில் 10 மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது. ஒரு தேர்தலுக்கு ஆலோசனை வழங்கினால், கட்டணமாக குறைந்தது ரூ.100 கோடி பெறுகிறேன். இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் நான் பெறும் ஆலோசனைக் கட்டணத்தை என் தேர்தலுக்காக செலவழிக்கிறேன்.
மக்களுக்கு சேவையாற்ற தற்போது அந்த ஆலோசனைப் பணிகளையும் மேற்கொள்வதில்லை. அதற்கு பதிலாக சாதாரண மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கிவருகிறேன். வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வெற்றி சூத்திரம் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் மக்கள்தொகையில் 80 சதவீத இந்துக்கள் இருக்கிறார்கள். அதில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தவர்கள் வெறும் 36 சதவிகிதம் மட்டுமே. மற்றவர்கள் பா.ஜ.க-வின் சித்தாந்தத்துடன் இணையாவர்கள். அந்த இந்துகளை அடையாளம் காணவேண்டும். அவர்கள் காந்திய சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்கலாம்.
அதேபோல லோஹியா ஜெய்பிரகாஷின் அம்பேத்கரிய, கம்யூனிஸ்ட், சோசலிச சித்தாந்தம் கொண்ட இந்துக்களும் பா.ஜ.க.வில் இல்லை. இந்த நான்கு குழுக்களான இந்துக்கள் முஸ்லிம்களுடன் இணைந்தால், 60 சதவிகித வாக்குவங்கியாக மாறுவீர்கள். பா.ஜ.க 40 சதவீதமாகக் குறையும். எனவே, இது போன்ற சித்தாந்த அடிப்படையிலான அமைப்பே வெற்றியை அடைவதற்கான உறுதியான வழி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.