ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்… கடுப்பான அம்பயர் – நடவடிக்கை பாயுமா?

India A vs Australia A Unofficial Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது, புகழ்பெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

எனவே, இந்தியாவின் பிரதான அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன்னர், இளம் இந்திய வீரர்களும் ஆஸ்திரேலிய சூழலுக்கு பழக்கப்படும் பொருட்டு அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கமாகும். அவர்கள் அங்கு ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதுவார்கள். இம்முறை இந்திய பிரதான அணிக்கும், இந்திய ஏ அணிக்கும் ஒரு பயிற்சி போட்டி திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது ரத்தானது வேறு கதை. இந்தியா ஏ அணியில் உள்ள பிரசித் கிருஷ்ணா, அபிமன்யூ ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் பிரதான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆறுதல் அளித்த சாய் சுதர்சன்

இந்தியா ஏ அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி கடந்த அக். 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணி, இந்தியா ஏ அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 195 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஏ அணியை ஆல்-அவுட்டாகியது.

அடுத்து இந்திய ஏ அணிக்கு சாய் சுதர்சன் 103, தேவ்தத் படிக்கல் 88 என கைக்கொடுக்க இந்தியா 312 ரன்களை குவித்து ஆல்-அவுட்டாகியது. இதனால் 225 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை ஆஸ்திரேலியா ஏ அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அடித்துவிட்டது. அதிலும், கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி 88 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ அணி நன்கு போராடியது என்றாலும் முதல் இன்னிங்ஸில் அடித்த குறைவான ஸ்கோர், அவர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் பிரச்னையாக்கியது.

‘முட்டாள்தனமான முடிவு’

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணி இன்றைய நாளின் தொடக்கத்தில் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கள நடுவர் ஷான் கிரேக் பந்தை ஆய்வு செய்து வேறு பந்தை மாற்றியிருக்கிறார். “நீங்கள் பந்தை கீரும்பட்சத்தில் பந்து மாற்றப்படும். எவ்வித பேச்சும் கிடையாது… விளையாடுங்கள்” என்றார்.  இவை அனைத்தும் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது. பந்து இந்திய அணியால் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தாலும் அவர்களுக்கு பெனால்டி ரன்கள் ஏதும் விதிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கள நடுவர் பந்தை மாற்றியதால் அதிருப்தி அடைந்த இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அதை ‘முட்டாள்தனமான முடிவு’ என களத்தில் விமர்சித்துள்ளார். இதைக் கேட்ட கள நடுவர் ஷான் கிரேக் இஷான் கிஷனை நோக்கி,”உங்களின் மாற்று கருத்திற்கு புகார் அளிக்கப்படும். இது மிகவும் ஏற்றுக்கொள்ளத் தகாத நடத்தை” என்றுள்ளார். இதனால், இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சிக்கலில் சிக்கிய இஷான் கிஷன்

ஏற்கெனவே கடந்தாண்டு இந்திய அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷனுக்கு தற்போது வரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட மறுப்பதாலும் ஏற்கெனவே இந்திய அணியில் ரிஷப் பண்ட் வருகைக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்டரே தேவைப்படவில்லை. பேக்அப்பாக துருவ் ஜூரேல் இருப்பதால் இஷான் கிஷனுக்கு தற்போது வாய்ப்பே இல்லை எனலாம். பார்டர் – கவாஸ்கர் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தும் இஷான் கிஷன் விடுவிக்கப்பட்டுள்ளார். இத்தனை பிரச்னைகள் இருக்க தற்போது ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்து சிக்கலில் சிக்கி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.