புதுடெல்லி: கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர்மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் உடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியா, கிரீஸ் இடையிலானஉறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் உறுதி மேற்கொண்டோம். வர்த்தகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்தில்இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடாக கிரீஸ் விளங்குகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம்,சவூதி அரேபியா, இஸ்ரேல், கிரீஸ்நாடுகளில் கடல், ரயில், சாலைவழியாக 6,000 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் 3,500 கி.மீ. கடல் வழித்தடம் ஆகும்.
தற்போது இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல 36 நாட்கள் ஆகிறது. புதிய வழித்தடத்தில் 14 நாட்களுக்கு முன்னதாகவே இந்திய சரக்குகளை ஐரோப்பாவுக்கு கொண்டு செல்ல முடியும். இந்த திட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியசரக்குகள் சென்றடைய கிரீஸ் நாடு நுழைவு வாயிலாக இருக்கும்.
கடந்த பிப்ரவரியில் கிரீஸ்பிரதமர் கிரியாகோஸ் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போதைய தொலைபேசி உரையாடலிலும் இந்த திட்டம் குறித்து இந்திய, கிரீஸ் பிரதமர்கள் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.