திருவனந்தபுரம்: கேரளாவில் விரைவு ரயில் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஷோரனூர் பகுதியில் தண்டவாளத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பரதபுழா என்ற நதியின் மீதுகட்டப்பட்டு உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த ராணி, வள்ளி, லட்சுமணன், மற்றொரு லட்சுமணன் என 4 பேர் நேற்று மாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரளா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்தது. இதை 4 பேரும் கவனிக்கவில்லை. ரயில் நெருங்கி வந்ததை பார்த்ததும் 4 பேரும் மறுமுனையை நோக்கி ஓடினர். அதற்குள் விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 4 பேரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பரதபுழா நதியில் விழுந்தன.
இதில் ராணி, வள்ளி, லட்சுமணன் ஆகியோரின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. மற்றொரு லட்சுமணனின் உடல் நதியில் அடித்துச் செல்லப்பட்டது. அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில்வே மேம்பாலத்தில் 3, 4-வது தூண்கள் அமைந்துள்ள பகுதிகளில் 4 பேரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விரைவு ரயில் வருவதை கவனிக்காததால் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். ஒருவரின் உடல் நதியில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. இரவில் மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாது. எனவே ஞாயிற்றுக்கிழமை காலை மீட்புப் பணியை தொடங்குவோம். விபத்துக்கான காரணம் குறித்து விசா ரணை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தனர்.