‘‘ஜார்க்கண்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’’: பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமித் ஷா பேச்சு

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அங்கு பொது சிவில் சட்டம் (யுசிசி) அமல்படுத்தப்படும் என்றும், அதேநேரத்தில் பழங்குடியினருக்கு அதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதேநேரத்தில் பழங்குடியினருக்கு அதில் விலக்கு அளிக்கப்படும். பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பொய் தகவலைப் பரப்புகிறது. இது முற்றிலும் ஆதாரமற்றது. ஏனெனில் அவர்கள் யுசிசியின் வரம்புக்கு வெளியே வைக்கப்படுவார்கள்.

ஜார்க்கண்ட்டில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், சர்னா மதச் சட்டப் பிரச்சினை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும். ஜார்க்கண்ட்டில் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்கள் காரணமாக இடம்மாற்றம் செய்யப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக இடம்பெயர்வு ஆணையம் அமைக்கப்படும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் 2.87 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உட்பட ஜார்க்கண்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதேபோல் ஜார்க்கண்ட் ‘பேப்பர் கசிவு’ விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்ட்டில் ஊடுருவியவர்களிடம் இருந்து நிலங்களைத் திரும்பப் பெறவும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை நாடு கடத்தவும் சட்டம் கொண்டுவரப்படும்.

ஜார்க்கண்ட்டில் ஊடுருவல்காரர்களால் அதன் நிலத்துக்கும், மகள்களுக்கும், உணவுக்கும் (Mati, Beti, Roti) அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு பாஜக பாதுகாப்பு அளிக்கும். மாநிலத்தில் பழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மக்கள் தொகை வேகமாக மாறி வருகிறது. ஜெஎம்எம் கட்சி ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

ஜார்க்கண்ட்டில் இந்துக்கள் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சமரச அரசியல் அதன் உச்சத்தில் உள்ளது. நாட்டிலேயே ஜார்க்கண்ட் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

சனிக்கிழமை ராஞ்சிக்கு வந்த உள்துறை அமித் ஷா, இன்று கட்ஷிலா, பர்கதா மற்றும் சிமாரியா தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் உரையாற்ற இருக்கிறார். மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வாக்குகள் நவம்பர் 23 ம் தேதி எண்ணப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.