புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநில மக்களிடம் வாக்குகள் கேட்கும் முன்பு அம்மாநிலத்துக்கு கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி ராயல்டி தாமதத்துக்கு பாஜக பதில் கூற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலக்கரி ராயல்டி மற்றம் மத்திய அரசு திட்டப்பலன்கள் என பல லட்சம் கோடி ரூபாய், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கங்கள் கோல் இந்தியா நிறுவனத்தின் துணைநிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அது அம்மாநிலத்துக்கு மிகப்பெரும் அளவிலான தொகையை நிலுவையில் வைத்துள்ளது.
நிலங்களுக்குகான இழப்பீட்டுகாக ரூ.1,01,142 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. பொதுவான நிலுவைத் தொகையாக ரூ.32,000 கோடியும், எடுக்கப்பட்ட நிலக்கரிகளுக்கான ராயல்டியின் கீழ் ரூ.2,500 கோடியும் வழங்கப்படாமல் உள்ளது.
உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் ஏன் இந்த நிதிகளை இதுவரை விடுவிக்கவில்லை? அம்மாநில மக்கள் ஜெஎம்எம் – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்ததால் அவர்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுகிறதா? மாநில பாஜக தலைமையால் ஏன் மாநிலத்துக்கு எந்த நிதியையும் பெற்றுத் தரமுடியவில்லை.
ஜார்க்கண்ட் மக்களிடம் வாக்கு கேட்பதற்கு முன்பு, மாநிலத்துக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பாஜக பதில் கூறவேண்டும்” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராஞ்சியில் வெளியிட்டார். மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வாக்குகள் நவம்பர் 23 ம் தேதி எண்ணப்படுகின்றன.