புதுடெல்லி: கனடாவின் டொரான்டோ மாகாணத்தின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கடனாவில் உள்ள கோயில்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கனடாவின் பிராம்ப்டனில் நடந்த வன்முறை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், “பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் நடத்திய வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கனடா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறோம். கனடாவில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் கனடா மற்றும் வெளிநாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிராம்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. பிராந்திய காவல் துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறையை கண்டித்துள்ள கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர்ரே போலிவ்ரே, “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா, “இந்தச் சம்பவம் மிகவும் ஆபத்தானது. காலிஸ்தானி தீவிரவாதிகள் தங்களுக்கான எல்லையை கடந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டார். டொரான்டோ நாடாளுமன்ற உறுப்பினர் கெவின் வூங், “தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக கனடா மாறியுள்ளது” என்று கவலை தெரிவித்தார். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூத கனேடியர்களை தீவிரவாத வன்முறையிலிருந்து பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக கனடா தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, இந்து கோயில் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோயில் முன்பாக ஏராளமான இந்துக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்துக்களையும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.