நியூயார்க்: கூகுளின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ள தகவல் மென்பொருள் இன்ஜினியர்கள் மற்றும் கோடர்களை அலர்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
கூகுள் நிறுவன மென்பொருள் சார்ந்த புரோகிராம் Code-களில் 25 சதவீதம் செயற்கை நுண்ணறிவு நுட்பம் எழுதி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனை பிழை திருத்துவது மற்றும் சரிபார்ப்பது ஆகிய பணிகளை இன்ஜினியர்கள் செய்வதாக அவர் சொல்லி உள்ளார்.
இப்போதைக்கு வழக்கமாக மேற்கொள்ளபப்டும் சில அடிப்படை பணிகளுக்கு மட்டுமே கூகுள் இதனை பயன்படுத்தி வருவதாக தகவல். இதன் மூலம் இன்ஜினியர்கள் வேறு வேளைகளில் கவனம் செலுத்தலாம் என கூகுள் எண்ணுவதாக தெரிகிறது. இது மென்பொருள் வடிவமைப்பு சார்ந்த பணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
அதே நேரத்தில் வரும் நாட்களில் ஆரம்ப நிலை கோடிங் பணிவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் இன்ஜினியர்கள் தங்கள் பணியை திறம்பட மேற்கொள்ள ஏஐ அசிஸ்ட் செய்யும் என்றே டெக் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏஐ தொழில்நுப்டம் பெரிய அளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அது பத்து ஆண்டுகளில் தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் தொழில் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏஐ ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.