சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட தயாராக இருந்தது. அந்தவிமானத்தில் பயணம் செய்ய வந்த அமெரிக்காவைச் சேர்ந்தடேவிட் (55) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, சேட்டிலைட் போன் ஒன்று இருந்தது.
இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேட்டிலைட் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் சேட்டிலைட் போன் எடுத்து வந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் அதை வாங்கி வைத்துக் கொண்டு ரசீது கொடுத்து விடுவார்கள். பின்னர், அந்த பயணி இந்தியாவில் இருந்து திரும்பிச் செல்லும்போது, அந்த போனை திருப்பி கொடுப்பது வழக்கமாகும். ஆனால் இந்த அமெரிக்க பயணி, தடையை மீறி சேட்டிலைட் போன் வைத்திருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.
அமெரிக்க பயணி விளக்கம்: ‘சில தினங்களுக்கு முன்புஅமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து, அங்கிருந்து அந்தமானுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறேன். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்கிறேன். அமெரிக்காவில் இருந்து வரும்போது கொண்டு வந்த சேட்டிலைட் போனை எந்த விமான நிலையத்திலும் தடுக்கவில்லை. எங்களுடைய நாட்டில் சேட்டிலைட் போனுக்கு எந்த தடையும் இல்லை’என்று டேவிட் தெரிவித்தார்.
அதிகாரிகள், அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து, அவர் வைத்திருந்த சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரையும் அவரது சேட்டிலைட் போனையும் சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.