ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி ராகிங் செய்த நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் 5 மாணவர்கள் ஒடிசா மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதுகுறித்து பீரம்பூர் காவல் துறை கண்காணிப்பாளரும், ராகிங் தடுப்பு குழு உறுப்பினர்களில் ஒருவருமான சர்வண் விவேக் கூறியதாவது: ஒடிசா அரசின் எம்கேசிஜி மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த ஜுனியர் மாணவர்களிடம் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் கடுமையான முறையில் தாக்கி ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராகிங் தடுப்பு குழு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியது. இதில், அந்த 5 மாணவர்களும் ஜூனியர் மாணவர்களிடம் கடுமையான மற்றும் தவறான முறையில் ராகிங்கில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நான்காம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்களையும் ஒடிசா மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து நீக்க ராகிங் தடுப்பு குழு முடிவெடுத்தது.
மருத்துவ கல்லூரி வளாகத்தில் மேலும் இதுபோன்ற ராகிங் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த கடுமையான முடிவை ராகிங் தடுப்பு குழு எடுத்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு தனியாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் தொடர்பாக மாணவர்களின் வாக்குமூலத்தை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமையன்று பதிவு செய்தனர். இவ்வாறு சர்வண் விவேக் கூறினார்.