பிரிஸ்பேனில் இந்திய தூதரகத்தை திறந்து வைத்தார் ஜெய்சங்கர்

பிரிஸ்பேன்:

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தார். இன்று பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார். இது ஆஸ்ரேலியாவில் உள்ள நான்காவது இந்திய தூதரக அலுவலகம் ஆகும். மற்ற அலுவலகங்கள் சிட்னி, மெலபோர்ன், பெர்த் ஆகிய நகரங்களில் உள்ளன.

இன்று தூதரக அலுவலகத்தை திறந்து வைத்த ஜெய்சங்கர், அதன்பின், ரோமா தெரு பார்க்லேண்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த தூதரகம் குயின்ஸ்லாந்து மாநிலத்துடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது, கல்வி தொடர்பான தொடர்புகளை வளர்ப்பது மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சேவைகளை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தூதரக திறப்பு விழாவில் பங்கேற்ற குயின்ஸ்லாந்து கவர்னர் ஜீனட், மந்திரிகள் ரோஸ் பேட்ஸ், பியோனா சிம்ப்சன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் தனது சுற்றுப்பயணத்தின்போது, கான்பெர்ரா நகரில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரிகளின் கட்டமைப்பு உரையாடலில் பங்கேற்கிறார். மேலும், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 2-வது ரைசினா டவுன் அண்டர் தொடக்க அமர்வில் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். இதுதவிர ஆஸ்திரேலிய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடகத்தினர் மற்றும் சிந்தனையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.