மும்பை மேற்கு பகுதியில் உள்ள மலாடு என்ற இடத்தில் வசிப்பவர் நவ்நீத் (39). இவர் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் வீட்டில் இருந்த படியே முடிவெட்டிக்கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து ஆன்லைனில் பார்த்து ஒரு சலூன் கடையில் வீட்டில் வந்து முடிவெட்டவும், ஷேவிங் பண்ணவும் ஆர்டர் செய்தார். உடனே முன்பதிவு செய்த சலூன் கடையில் இருந்து ஒருவர் நவ்நீத் வீட்டிற்கு வந்தார்.
அவர் நவ்நீத்திற்கு முடிவெட்டி, ஷேவிங் செய்தார். அதன் பிறகு நவ்நீத் முகத்தில் சில பருக்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய சலூன் கடை ஊழியர், அதனை தன்னால் சரி செய்ய முடியும் என்று தெரிவித்தார். உடனே நவ்நீத்தும் சரி செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து நவ்நீத் முகம் முழுக்க ஒரு வகையான கிரீமை தடவி ஒரு துணியை போட்டு மூடி கண்ணை சிறிது நேரம் திறக்க முடியாதபடி சலூன் கடை ஊழியர் செய்துவிட்டார். கிரீம் முகத்தில் இருந்த நேரத்தில் நவ்நீத் வீட்டில் இருந்த சலூன் கடை ஊழியர் வீட்டில் இருந்த பீரோவை திறப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. ஆனால் முகத்தில் கிரீம் இருந்ததால் நவ்நீத் கண்ணை திறந்து பார்க்கவில்லை. சலூன் கடை ஊழியர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகு பீரோவை பார்த்தபோது அது லேசாக திறந்திருந்தது. பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் காணாமல் போய் இருந்தது. இது குறித்து நவ்நீத் தனது தாயாரிடம் கேட்டதற்கு, அவருக்கும் அது குறித்து தெரியவில்லை என்று தெரிவித்தார். இதனால் சலூன் கடை ஊழியர்தான் வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை திருடிச்சென்று இருக்கவேண்டும் என்று கருதி அது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.