நடிகர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் மற்றும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், மறைந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை `அமரன்’ திரைப்படமாக தீபாவளியன்று திரைக்கு வந்தது. இந்தப் படம், வெளியான நாள்முதல் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், அமரன் திரைப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, “படம் ஆரம்பிக்கும்போது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்னு ஒரு எண்ணம் இருக்கும். அது வசூல் சார்ந்தது அல்ல. நாம் நினைச்சது சரியாக நடந்துருக்குனு சந்தோஷமாக இருக்கு. என்னுடைய நண்பர் சமீபத்துல எனக்கு கால் பண்ணினார். அவங்க தந்தை பத்திரிகையாளராக இருந்து இறந்தவர். என்னுடைய அம்மா என்னுடைய தந்தையை எப்படி சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அனுமதிக்கிறாங்கனு நினைச்சுட்டு இருப்பேன்.
இந்தப் படம் எங்க அம்மாவோட பார்வையை புரிய வச்சுருக்கு. ரங்கூன் படம் கெளதம் கார்த்திக்குக்கு கரியர் மாற்றம் அடையுற படமா இயக்குநர் கொடுத்தார். இப்போது சிவகார்த்திகேயனோட கரியரை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகிற அளவுக்கு ஒரு படம் கொடுத்துருக்கார். அந்த மாதிரி எனக்கு ஒரு படம் கொடுக்கணும்னு நான் துண்டு போட்டு வச்சுக்கிறேன்.” என்றார்.