`கட்சி சேர’, `ஆசை கூட’ பாடல்களின் மூலம் மார்டன் ஹிட் கொடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சாய் அபயங்கர்.
‘ஜென் – சி’ மோடில் அமைந்த இந்த பாடல்கள் வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இது போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்த இந்த சுயாதீன இசைக்கலைஞருக்கு தற்போது சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் `பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படமும் லோகேஷின் கனகராஜின் `எல்.சி.யு’ யுனிவர்ஸிற்குள் வரும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். இந்த யுனிவர்ஸில் இடம்பெறும் திரைப்படங்களுக்கு அனிருத்தும், சாம் சி. எஸும் இதுவரை இசையமைத்திருந்தனர். இந்த யுனிவர்ஸுக்கு புதுவரவாக மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் சாய்.
அவரைத் தொடர்புக் கொண்டு வாழ்த்துகளைக் கூறி பேச தொடங்கினோம், “இந்த வாய்ப்புக்கு முதல்ல நான் என்னுடைய வழிகாட்டிகளான சந்தோஷ் குமார், மகேஷ் ராஜேந்திரன் மற்றும் என்னுடைய தந்தை திப்புவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இசை பயணத்துல இவங்கதான் என்னை வழிநடத்தி கூட்டிட்டு போனாங்க. இந்த வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முக்கியமான காரணமும் இவங்கதான். எனக்கு எப்போதும் கதைகள் கேட்கிறதுக்கு பிடிக்கும். அப்படிதான் ஒரு நாள் எனக்கு சந்தோஷ் கால் பண்ணி `ஒரு நல்ல கதை இருக்கு.
உங்களுக்கு ஒரு சப்ரைஸும் இருக்கு’னு சொல்லி கூப்பிட்டாரு. கதை கேட்கிறதுக்குப் போனேன். அங்க இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் சார் இருந்தார். அவருடைய ரெமோ, சுல்தான் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடை படம்னு தெரிஞ்சிருந்தால் கதை கேட்காமலேயே மியூசிக் போட்டிருப்பேன். அப்புறம் பாக்யராஜ் சாரும் கதை சொன்னார். கதை சொல்லும்போது யுனிவர்ஸ் கனெக்ட் பற்றி சொன்னதும் ஆச்சர்யமாகிட்டேன். `சார், கேள்வியே வேண்டாம். இந்தப் படத்தை நான் கண்டிப்பா பண்றேன்’னு அவர்கிட்ட சொல்லிட்டேன். அப்படிதான் `பென்ஸ்’ திரைப்படத்துக்குள்ள நான் வந்தேன். இந்த வாய்ப்பு எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. இந்த யுனிவர்ஸ்ல வந்த மியூசிக் பற்றி அதிகளவுல பேசப்பட்டிருக்கு.
என்னை நம்பி இந்த பொறுப்பை என்னுடைய தயாரிப்பாளர்கள் சுதன் சார், லோகேஷ் கனகராஜ் அண்ணா, ஜெகதீஷ் பழனிசாமி அண்ணா கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு. ரெண்டுமே ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு. கமர்சியல் ஃப்ளேவரோட நல்ல ஆல்பமாக இது நிச்சயம் இருக்கும். `பென்ஸ்’ படத்தோட மோஷன் போஸ்டர் சமீபத்துல வந்திருந்தது. அந்த மோஷன் போஸ்டருக்க்கு மியூசிக் நான்தான் போட்டேன். இயக்குநரும் தயாரிப்பாளர்களும் என்னை தொடர்ந்து ஊக்குவிச்சுட்டே இருக்கிறதுனாலதான் என்னால நம்பிக்கையோட வேலை பார்க்க முடியுது.” என்றவர், ” லோகேஷ் அண்ணா `பென்ஸ்’ படத்தோட ஒரு பாடல் கேட்டதும் பாராட்டி நம்பிக்கைக் கொடுத்திட்டு போனார்.
அதுபோல இயக்குநர் பாக்யராஜ் சாரும் பாடல்கள் கேட்டுட்டு பாராட்டினார். இது மாதிரியான பெரிய படத்தின் மூலமாக அறிமுகமாகுறது ரொம்பவே சந்தோஷம். இதுமட்டுமல்ல….இன்னொரு ஸ்பெஷல் தருணமும் இருக்கு. என்னுடைய `ஆசை கூட’ பாடல் வெளியான அன்னைக்குதான் `பென்ஸ்’ திரைப்படத்துல கமிட்டானேன்.” என்றார்.
நடிகர் விஜய் இவருக்கு கைகொடுத்து ஊக்குவிக்கும் காணொளி சமீபத்தில் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக பார்க்க முடிந்தது. அது பற்றி கேட்கையில், ” அவர் `ஆசை கூட’ பாடல் கேட்டிருக்கார். `கட்சி சேர’ பாடலும் கேட்டிருப்பார்னு நினைக்கிறேன். அட்லீ அண்ணாதான் விஜய் சாருக்கு `ஆசை கூட’ பாடல் பிடிச்சிருந்ததாக சொன்னார். இன்னும் உற்சாகமான சில விஷயங்கள் வெளிவரவிருக்கு. அந்த விஷயங்களும் உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.” என முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…