IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? 'அவரை' உடனே சேர்த்துக்கோங்க!

India National Cricket Team: சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை (IND vs NZ Test Series) 0-3 என்ற கணக்கில் முழுவதுமாக இழந்த இந்திய அணி (Team India) தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஜூலை மாதமே டி20 உலகக் கோப்பையை வென்று மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து பெரும் அடிகள் விழுந்தது எனலாம். 

ராகுல் டிராவிட் விலகிய பின்னர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கை அணிக்கு எதிராக 27ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் தொடரை இழந்தது. அதேபோல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய மண்ணில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததும் இப்போதுதான். எனவே, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அழுத்தம் அதிகமாகி உள்ளது. 

அதேபோல், இந்திய டெஸ்ட் அணியில் தற்போது சீனியர்களாக விளங்குபவர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர்தான்… நியூசிலாந்து தொடரில் மூவரும் செயல்பாடும் அவர்களின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை எனலாம். அஸ்வினும் முக்கியமான தருணங்களில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியதையும் பார்க்க முடிந்தது. இதனால், இந்த மூவருமே கடுமையான அழுத்தத்தில்தான் இருக்கின்றனர். 

இந்த 4 பேருக்கு முக்கியமான தொடர்

கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின் ஆகிய நால்வருக்கும் ஆஸ்திரேலிய அணி உடன் (India vs Australia) மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் முக்கியமான தொடராக இருக்கும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்றால் இந்தியா அடுத்து வரும் 5 போட்டிகளில் நான்கில் வென்று, ஒன்றில் டிரா செய்ய வேண்டும். இது மற்ற அணிகளின் முடிவுகள் சாராமல் இந்தியா தகுதிபெறுவதற்கான வாய்ப்பு எனலாம். ஒருவேளை WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறாவிட்டால் இதுதான் இந்த நான்கு பேருக்கும் கடைசி டெஸ்ட் தொடராகவும் இருக்கலாம்.

கௌதம் கம்பீர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரே அதை தீர்மானிக்கும் என்றும் கூறலாம். ரோஹித் சர்மா (Rohit Sharma) ஏற்கெனவே பெர்த் டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு குறைவாகதான் உள்ளது. விராட் கோலிக்கு (Virat Kohli) ஆஸ்திரேலியா ரன்களை குவிக்க ஒரு சொர்க்க பூமி எனலாம். அங்கும் அவர் சொதப்பினால் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதே அணிக்கு நல்லது என்கின்றனர் வல்லுநர்கள். ரவிசந்திரன் அஸ்வினும் (Ravichandran Ashwin) இந்த WTC சுழற்சி உடனே ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார் என தெரிகிறது. 

செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தச் சூழலில், பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border – Gavaskar Trophy) இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசுவதும் அவசியமாகும். அணிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய அவசியமும் எழுகிறது. ரோஹித் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றால் அந்த இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் அபிமன்யூ ஈஸ்வரன்தான் களமிறக்கப்பட வேண்டும். அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் சொதப்பினாலும், இந்தியாவில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தவர் என்பதும் நினைவுக்கூரத்தக்கது. அவருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது அவசியமாகிறது.

கேஎல் ராகுல் இப்போது வேண்டும்…?

அதேபோல் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுலை (KL Rahul) மீட்டெடுக்க வேண்டும். வெளிநாட்டு மண்ணில் கேஎல் ராகுல் வித்தியாசமானவர் எனலாம். இந்தியாவில் ராகுல் ஒரே ஒரு முறைதான் டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். மீதம் அவர் அடித்த 7 சதங்களும் அந்நிய மண்ணில் அடித்தவை. அதிலும் தென்னாப்பிரிக்காவில் இரண்டு முறை, இங்கிலாந்தில் இரண்டு முறை, கரீபியன் தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியாவில் தலா ஒரு முறை சதம் அடித்துள்ளார். அவர் கூடுதல் அழுத்தம் இன்றி விளையாட இந்த தொடரை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கேஎல் ராகுல் பலமானால் இந்திய மிடில் ஆர்டரே பலமாகிவிடும். 

KL Rahul and Dhruv Jurel added to India A squad. (Express Sports). pic.twitter.com/5YwBaHrRe2

— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 3, 2024

சிராஜிற்கு ஓய்வு தேவை…

அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா – ஆகாஷ் தீப் ஆகிய வேகப்பந்துவீச்சு கூட்டணி ஆஸ்திரேலியாவில் உறுதியாகிவிட்டது. சிராஜிற்கு பதில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவருக்கு இந்தியா வாய்ப்பளிக்கலாம். சிராஜ் பந்துவீச்சில் தென்படும் ஓட்டைகள் சீராகும் வரை அவருக்கு பயிற்சியும், ஓய்வும் தேவை எனலாம். எனவே மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்வதில் இந்திய அணி கூடுதல் சிரத்தையாக இருக்க வேண்டும். நிதிஷ் குமார் ரெட்டியையும் காம்பினேஷனில் கொண்டு வர யோசிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.