“உங்களுக்காக போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – வயநாட்டில் பிரியங்கா காந்தி பேச்சு

வயநாடு: “நான் நன்றாக போராடுவேன். உங்களுக்காக போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்” என பிரியங்கா காந்தி வயநாடு தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தொகுதிக்கு உட்பட்ட கொடாஞ்சேரி, கிழிசெரி உள்ளிட்ட இடங்களில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வயநாடு தொகுதிக்கு எப்போதாவதுதான் வருவேன் என என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கூறுகிறார்கள். இதற்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன்.

எனது மகன் உறைவிட பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவனைப் பார்க்க அடிக்கடி பள்ளிக்குச் செல்வேன். ஒரு கட்டத்தில் பள்ளியின் முதல்வர் என்னிடம், உங்கள் வருகையை குறைத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். எனவே, நான் உங்களை சந்திக்க மாட்டேன் என நீங்கள் கூறினால், அந்த பள்ளியின் முதல்வரைப் போல் நீங்கள் சொல்லும் நிலையை ஏற்படுத்துவேன். வயநாடு வந்தது போதும்; சிறிது காலம் நீங்கள் டெல்லியில் இருங்கள் என்று நீங்களே சொல்வீர்கள்.

வயநாடு தொகுதியில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் உள்ளன. மருத்துவக் கல்லூரி இல்லை, இரவுப் பயண கட்டுப்பாடுகள் உள்ளன, மனித – விலங்கு மோதல்கள் உள்ளன. இத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக ராகுல் காந்தியைப் பாராட்டுகிறேன். பாஜக தலைமையிலான மத்திய அரசு “பிளவு அரசியலில்” ஈடுபட்டு வருகிறது.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பல சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நான் இங்கு காண்கிறேன். துரதிருஷ்டவசமாக, இந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பா.ஜ.க.வின் கொள்கைகள், மக்கள் தங்கள் கல்வியை முடித்த பிறகும் வேலை தேடுவதை சவாலாக ஆக்கியுள்ளது. நான் நன்றாக போராடுவேன். உங்களுக்காக போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்.

ராகுல் காந்தி உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறார். அதனால்தான் என்னை இங்கு தேர்தலில் நிற்கச் சொன்னார். தேசத்தின் விழுமியங்களை அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக ராகுல் தனியாகப் போராடிய போது, ​​கடினமான காலங்களில் நீங்கள்தான் அவருக்கு துணையாக நின்றீர்கள். ஒரு பெரிய அவதூறு பிரச்சாரம் இருந்தபோதிலும், நீங்கள் அவருக்கு அன்பையும் ஆதரவையும் காட்டியுள்ளீர்கள். தொடர்ந்து போராடுவதற்கான வலிமையையும் தைரியத்தையும் அவருக்குக் கொடுத்தீர்கள்.

உங்களின் ஆதரவு அவருக்கு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும், மணிப்பூரிலிருந்து மும்பை வரை அன்பைப் பரப்புவதற்காகவும் நடக்க முடிந்தது. ஒவ்வொரு அடியிலும் வயநாட்டு மக்கள் தன்னுடன் நடப்பதை உணர்ந்ததாக அவர் அடிக்கடி கூறுவார். உங்கள் ஆதரவிற்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரியங்கா காந்தி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.