`ஓடத்தொடங்கும்போது அம்மாவை நினைச்சுக்குவேன்' – முதலைமைச்சர் கோப்பையில் தங்கம் வென்ற கௌசிகா

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘முதலமைச்சர் கோப்பை 2024’ல் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்துடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை மற்றும்  800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்துடன் 75,000 ரூபாய்க்கான காசோலை என இரண்டு பரிசுகள்.

அடுத்த சில நாட்களிலேயே ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தெற்கு மண்டலத்துக்கு இடையிலான போட்டியில் மூன்றாவது பரிசு என ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் கௌசிகா விருதுநகர் மாவட்டம் முகவூரில் பத்தாவது படிக்கும் மாணவி. ஆறாம் வகுப்பிலிருந்து ஆர்வம் காட்டத் தொடங்கி, செல்கிற இடங்களிலெல்லாம் வென்று வருவதால், இவர் படிக்கும் அரசு உதவி பெறும் நாடார் உறவின் முறைப் பள்ளியானது இவருக்கு முழு ஆதரவைத் தந்துவருகிறது. எனினும் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கிற கௌசிகாவின் குடும்பம் அரசிடமிருந்து கௌசிகாவின் படிப்புக்கும் விளையாட்டுக்கும் ஏதாவது உதவி கிடைக்காதா என எதிர்பார்த்து நிற்கிறது. கௌசிகாவுடன் பேசினோம்.

”எங்க வீட்டுல நான், அக்கா, அம்மா மூணு பேர். என் அப்பா பத்து வருஷத்துக்கு முன்னாடியே கேன்சர்ல இறந்துட்டார். அப்ப எனக்கு எந்த விவரமும் தெரியாது.  அம்மா வீட்டுலயே தையல் மிஷின் வச்சு துணி தைக்கிறாங்க. அதுல வர்ற வருமானம் ரொம்பவே கம்மிதான். அதனால சில சமயங்கள்ல நான் விளையாட்டுப் போட்டிகள்ல ஜெயிச்சு வாங்கிட்டு வர்ற பணம் எங்க குடும்பத்துக்குப்  பெரிய உதவியா இருக்கும். அதனால சில சமயம் ஓடத் தொடங்கும் போது அம்மா முகத்தை நினைச்சுப் பார்த்தா அப்படியொரு வேகம் வரும். ஜெயிச்சே ஆகணும்னு ஓடுவேன்  .

கௌசிகா

பள்ளிக் கூடத்துல என் விளையாட்டு ஆர்வத்துக்குப் பயிற்சிக்கு அனுமதிக்கறது, அட்டென்டன்ஸ் தர்றதுன்னு ரொம்பவே சப்போர்ட் பண்றாங்க. இருந்தாலும் சில நேரம் வெளியூர்கள்ல நடக்கிற போட்டிகள்ல கலந்துக்கிடுறபோது, போக்குவரத்து, தங்குமிடச் செலவையெல்லாம் சமாளிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு. சொந்தக்காரங்கள்ல சிலர் உதவுறாங்கன்னாலும் அம்மாவால ஓரளவுக்கு மேல சமாளிக்க முடியல” என்கிறார் இவர்.

போக்குவரத்து மற்றும் இன்ன பிற செலவுகளைச் சமாளிக்க முடியாத காரணத்தாலேயே சில போட்டிகளிலிருந்து கடைசி நேரத்தில் கௌசிகா விலகியதெல்லாம்கூட நடந்திருக்கிறதாம்.

கெளசிகா

கௌசிகாவின் அம்மா மீனாவிடம்  பேசினோம்.

”வால்டர் தேவாரம், சென்னை மேயர் பிரியான்னு பெரிய பெரிய ஆளுங்க கையிலெல்லாம் சமீபத்துல விருது வாங்கினா என் பொண்ணு. ராஜபாளையம் ஏரியாவுல எங்க ஓட்டப் பந்தயம்னாலும் கலந்துகிடறது மட்டுமில்ல, நிச்சயம்  ஜெயிச்சுட்டும் வந்துடுவா. உள்ளூரை விட்டுத் தாண்டி இப்ப மாநில அளவிலான போட்டிகள்லயும் கலந்துக்கிட்டு ஜெயிக்கத் தொடங்கியிருக்கா. அவளுடைய ஆசை பி.டி.உஷா மாதிரி நாட்டுக்காக ஓடணும்கிறதுதான். தேசிய அளவிலான போட்டிகள்ல கலந்துகிடணும்னா நல்லா சாப்பிடணும், தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கித் தரணும். போட்டிகள் நடக்கிற இடங்களுக்குப் போயிட்டு வரணும்னு நினைக்கிறப்ப நம்மால இது சாத்தியப் படுமான்னு சமயத்துல பெரிய மலைப்பா இருக்கு.

தையல் தொழில் மூலம் கிடைக்கிற வருமானம் ரெண்டு மகள்களையும் படிக்க வைக்கிறதுக்கே பத்த மாட்டேங்குது. பெரிய மகள் டிப்ளமோ படிச்சிட்டிருக்கிறா. அதனால சில நேரம் ஓட்டத்தையெல்லாம் மறந்துட்டுப் படிப்பைப் மட்டும் பாருன்னு சொல்லிப் பார்த்தேன். அவளும் சமயத்துல சரின்னு சொல்லிடுவா. ஆனா ரெண்டு நாள்ல மறுபடியும் விளையாட்டுச் சிந்தனை வந்துடுது. அவளால அதை தடுக்க முடியல. இப்ப வந்திருக்கிற எங்க மாவட்டக் கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களின் படிப்பு விஷயம்னா யார் என்ன உதவின்னு கேட்டாலும் செய்யறார்னு கேள்விப்பட்டோம். என் பொண்ணு விஷயமும் அவர் கவனத்துக்குப் போயிருக்கு. சாதகமா ஏதாவது நடந்தா என் பிள்ளையோட கனவு நனவாகும்”’ என்கிறார் இவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.