திருப்பத்தூர்: பராமரிப்பின்றி பாழாகும் பூங்கா; கூடாரமாக்கி கொண்ட சமூக விரோதிகள்- கண்டுகொள்ளுமா அரசு?

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணை அருகில்  இந்த சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா நீர்வளத்துறை சார்பில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டு சில ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கு, செயற்கை நீர் ஊற்றுகள், நடைபாதை, ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளது.

மேலும், சிறுவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் மான், மயில், இரட்டை காளைகள், சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட பல விலங்குகளின் சிலைகள் உள்ளது. மேலும், பெரியவர்களுக்காகப் பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொழுதைப் போக்க‌ நிழற்குடைகளுடன் கூடிய நாற்காலிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த பூங்கா கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும், பூங்காக்களில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதுதவிர, விலங்கு சிலைகளின் கொம்புகள், தலை, வால் ஆகிய பகுதிகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். ஊஞ்சல், ராட்டினம் ஆகியவை அறுந்து கீழே விழுந்து கிடக்கிறது.

நடைபாதைகளின் இரு பகுதிகளிலும் செடி, கொடிகள் மற்றும் புற்கள் வளர்ந்து பாதையை ஆக்கிரமித்துள்ளது. சிலர் பூங்காவிலேயே மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். பூங்காவில் உள்ள கழிவறை மூடியே கிடக்கிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சிலர் ஆங்காங்கே சிறுநீர் கழித்து விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இது போன்ற பல காரணங்களால் பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

ஆண்டியப்பனூர் அணையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களும் இது போன்ற காரணங்களால் சிறுவர் பூங்கா பக்கமே திரும்பிப் பார்க்காமல் சென்று விடுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.