பாட்னா: பொதுவெளியில் பாஜக தலைவரின் காலை தொட்டு வணங்கிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயலுக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
பிஹாரில் நடைபெற்ற சித்திரகுப்தா பூஜையில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.கே. சின்ஹா பங்கேற்றார். அப்போது, பொது வெளியில் அவரின் காலைத் தொட்டு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, பொதுவெளியில் பாஜக தலைவரின் காலைத் தொட்டு வணங்கிய நிதிஷ் குமாரின் செயலுக்கு லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், மக்களின் காலைத் தொடும் பழக்கத்தை கொண்டவர் என நிதிஷை அவர் விமர்சித்துள்ளார்.
நிதிஷ் குமார் இதுபோன்று பொதுவெளியில் காலில் விழுந்து வணங்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பு, பல தருணங்களில் பிரதமர் மோடியின் காலில் விழுந்து நிதிஷ் குமார் வணங்கியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, நிதிஷ் குமார் என்டிஏ கூட்டணியில் இணைந்தது குறித்து பிரதமர் வெகுவாக பாராட்டி பேசினார். அந்த நிகழ்வில், பிரதமரின் காலைத் தொட நிதிஷ் முயன்றபோது அதனை கருணையுடன் இடைமறித்த பிரதமர் அன்புடன் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.