மும்பை: புல்வாய் இன (black buck) மானைக் கொன்றதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் எங்கள் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி தொகை வழங்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு, “லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் என்று கூறிக்கொண்ட ஒரு நபரிடமிருந்து எங்களுக்கு செய்தி ஒன்று வந்தது. அதில், சல்மான் கான் தொடர்ந்து உயிர்வாழ விரும்பினால் அவர் எங்களின் கோயில் ஒன்றுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லையென்றால் கொலை செய்யப்படுவார். எங்களின் கும்பல் இப்போதும் செயல்பாட்டில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது” என்று தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், செய்தி அனுப்பிய நபரைத் தேடி வருவாதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அக்.30-ம் தேதி இதேபோன்ற ஒரு கொலை மிரட்டல் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ரூ.2 கோடி பிணையத்தொகை கேட்கப்பட்டது. இதனிடையே நடிகர் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகனும் என்சிபி எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் முகம்மது தைய்யப் அல்லது குர்ஃபான் கான் என்பது தெரியவந்துள்ளது. அவர் நொய்டாவின் செக்டார் 39ல் கைது செய்யப்பட்டார்.