டெல் அவிவ்: தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக லெபானினிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் வடக்கு பகுதிமீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2 மாதங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தெற்கு லெபனானின் பராச்சிட் பகுதிக்கான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அபு அலி ரிடா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எப்போது கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படவில்லை.