மதுரை: விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. ஆனால், தனியார் மதுக் கடைகளுக்கு மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்து மனமகிழ் மன்றம் மது விற்பனை என்பது அந்த சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்க முடியும். ஆனால், தமிழகத்தில் எஃப்எல் -2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் சட்ட விரோதமாக உறுப்பினர் அல்லாதவருக்கும் மதுவை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. இவ்வாறு விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்களின் பதிவுகளை பதிவுத் துறை ரத்து செய்யலாம்.
ஆனால், மனமகிழ் மன்றங்கள் அதற்கான விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும் அரசியல் பின்புலம் கொண்டவர்களின் தலையிட்டால் அதன் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதில்லை. இவை தொடர்பாக நடவடிக்கை கோரி பதிவுத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழகத்தின் அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, விதி மீறி செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக் குமார் ஆஜராகி, “மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மாதந்தோறும் இரண்டு தடவை வட்டாட்சியர் உள்ளிட்ட துறை அதிகாரிகளால் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை. விதிமுறைகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து மனமகிழ் மன்றங்கள் விதிப்படி செயல்படுகிறதா என்பதை பதிவுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அது தொடர்பாக தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை செயலர் மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிச.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.