Happy Birthday Virat Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை புரிந்துள்ளார். தற்போது விளையாடி வரும் கிரிக்கெட்டர்களில் தலைசிறந்த ஒருவராக உள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பையின் போது விராட் கோலி தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ஒருநாள் போட்டிகளில் தனது 49 வது சதத்தை நிறைவு செய்து இருந்தார் கோலி. சமீபத்தில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வரும் விராட் கோலிக்கு இந்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி மிகவும் சவாலாக இருக்கும். இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதிலும், வீரராக இருந்த போதிலும் பல முறியடிக்க முடியாத சாதனைகளை செய்துள்ளார்.
விராட் கோலியின் சாதனைகள்:
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி முக்கிய வீரராக இருந்தார். அந்த சீசனில் மொத்தம் 765 ரன்கள் அடித்து, உலக கோப்பை ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. 11 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 673 ரன்கள் அடித்து இருந்தார். 2023 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்த போதிலும் தொடர நாயகன் விருதை வென்று இருந்தார் விராட் கோலி.
2023ல் சச்சின் டெண்டுல்கரின் மகத்தான சாதனையை விராட் கோலி முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதம் அடித்து இருந்த போது, மும்பையில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக கோலி தனது 50வது ஒருநாள் சதத்தை அடித்தார்.
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருந்து வந்தார். சமீபத்தில் ரோகித் சர்மா இவரை முந்தி முதல் இடத்திற்கு வந்தார். தற்போது கோலி டி20 போட்டிகளில் 4188 ரன்களும், ரோஹித் 4231 ரன்களும் அடித்துள்ளனர். இந்த இருவருமே தற்போது ஓய்வை அறிவித்துள்ளனர்.
டி20 போட்டிகளில் அதிகமுறை (7 முறை) தொடர் நாயகன் விருதுகளை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக (267 இன்னிங்ஸ்) 13000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இந்த சாதனையை பெற சச்சின் டெண்டுல்கருக்கு 321 இன்னிங்ஸ் தேவைப்பட்டது.
டி20 போட்டிகளில் அதிக முறை அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி வைத்துள்ளார். அவருடன் இந்த சாதனையை பாகிஸ்தான் பாபர் அசாமும் பகிர்ந்து கொள்கிறார். இருவரும் 39 அரைசதங்கள் அடித்துள்ளனர்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து பார்மெட்டிலும் 21 முறை தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4வது இடத்தில் உள்ளார். மொத்தமாக இதுவரை 2682 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி வைத்துள்ளார். இவருக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 145 அரை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.