BB Tamil 8 Day 29: `இருங்க பாய்!' – கலகத்தைத் தொடங்கிய பெண்கள் அணி; சூடுபிடிக்குமா ஆட்டம்

 பெண்கள் அணி செய்த ‘30 செகண்ட்ஸ்’ கலகத்தால், இன்றைய எபிசோடு உயிர் பெற்றது. பொழுதும் சிறப்பாகப் போனது. அதிலும் நடு ரோட்டில் அமர்ந்து சவுந்தர்யா செய்த ‘தர்ணா’ எல்லாம் வேற லெவல்.

‘இன்னாப்பா.. இந்தப் பொண்ணு இப்படி சொதப்புது’ என்று நினைத்த காலம் போய் இன்னமும் பல வாரங்களுக்கு சவுந்தர்யா நீடிப்பார் போலிருக்கிறது. அப்படியொரு அலப்பறை. ‘ஏண்டா கேப்டன் ஆனோம்?’ என்று முதல் நாளிலேயே சத்யாவின் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்தார்கள், பெண்கள். 

பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?- நாள் 29

நள்ளிரவு 03:45.  தூக்கம் வராமல் ராணவ்வும் சாச்சனாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ராணவ் ஏன் இண்டர்வியூவில் தோற்றுப் போனார் என்பதற்கான காரணங்களை டிப்ஸ் மாதிரி சொல்லிக் கொண்டிருந்தார் சாச்சனா. ‘இந்தப் பிள்ளைப்பூச்சி கிட்ட எல்லாம் டியூஷன் கேட்க வேண்டியிருக்கு’ என்கிற மோடில் அமர்ந்திருந்தார் ராணவ்.  வெளியே படுத்துறங்கும் தண்டனையை விடியற்காலையில் ரத்து செய்து கருணை காட்டினார் பிக் பாஸ். 

பெண்கள் அணிக்குச் செல்வதற்காக ராணவ்வை பாய்ஸ் டீம் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ‘ரகசியத்தை சொல்லிடுவேன்’ என்று ஓப்பனாக சொல்லி  அருணால் மடக்கப்பட்டவர் ராணவ். மேலும் அணி மாறுபவர்களுக்கு டைரக்ட் நாமினேஷன் பவரும் கிடைக்கும்.  புதிதாக வந்தவருக்கு எப்படி இந்த சான்ஸை ஆண்கள் அணி தூக்கிக் கொடுத்தார்கள்? டைரக்ட் நாமினேஷன் பவரை விடவும் பெண்கள் அணியில் ஒரு வாரம் காலம் தள்ளுவது கொடுமையானது என்பதால் புது நபரை பலியாடாக இறக்கிவிட்டு விட்டார்களா?

BBTAMIL 8: DAY 29

‘எந்தவொரு சீசன்லயும் இல்லாத அளவுக்கு 21 நபர்கள் இருப்பது இந்த சீசன்தான். சிறப்பா வழிநடத்துங்க” என்று பதவியேற்றுக் கொண்ட சத்யாவை வாழ்த்தினார் முத்து. “எல்லோரும் நேர்மையா கேம் ஆடுங்க.. “ என்று பேச ஆரம்பித்த சத்யா “கோடு தாண்டறதை சரியா ஃபாலோ பண்ணுங்க. மீறினா டாஸ்க் வழங்கப்படும் ” என்று பெண்கள் அணிக்குச் சொன்ன நேரம் கொழுத்த ராகு காலமாக இருந்திருக்க வேண்டும். இந்த நாள் முழுக்க பீச் -தாம்பரம் ட்ரெயின் மாதிரி,  இரண்டு அணிக்கும் இடையே அவர்  ‘ரவுண்ட் டிரிப்’ செல்ல வேண்யிருந்தது. 

‘ரைட்டு.. சைத்தான் சைக்கிள்ல வருது’  – பாய்ஸ் டீம் மைண்ட் வாய்ஸ்

ஆண்கள் அணிக்குச் செல்ல வேண்டியவர் யார் என்கிற டிஸ்கஷனை பெண்கள் அணி மேற்கொண்டது.  “முன்ன பாய்ஸ் டீம்ல ஆள் கம்மி. ஈஸியா உள்ள விட்டாங்க. இப்ப விட மாட்டாங்க” என்றார் ஜாக்குலின். என்றாலும் பலரும் ஜாக்கை அந்தப் பக்கம் தள்ளி விடுவதில் கொலைவெறியாக இருந்தார்கள். “ஜாக்குலின்தான் சரியான சாய்ஸ். பாய்ஸ் டீம் தாங்க முடியாம மண்டையைப் பிய்ச்சுப்பாங்க. அவங்களால கேம்ல கவனம் செலுத்த முடியாது” என்று மஞ்சரி சொன்னது, ஜாக்கிற்கு சொன்ன பாராட்டு போல் சொன்ன ஊமைக்குத்தாக இருந்தது. 

சமையல், ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் என்று அணிகள் பிரிக்கப்பட்டன. பெண்கள் அணிக்கு சமைப்பதற்காக சவுண்டு  ‘சவுந்தர்யா’ தேர்ந்தெடுக்கப்பட்டார். (பாவம், பெண்கள் அணி). அணி மாற வேண்டிய நேரம். ‘பாய்ஸ் டீமிற்கு நிறைய கம்பர்ட் கொடுக்காதீங்க” என்று போட்டுக் கொடுத்து விட்டுச் சென்றார் ஜாக்குலின். 

BBTAMIL 8: DAY 29

ஆனால் விதி அவருக்கு வேறு மாதிரியாக அமைந்தது.  “குளிக்கறதுக்கு மட்டும் கேர்ஸ் டீம் பக்கம் போயிட்டு வந்துடட்டுமா?” என்று ஜாக்குலின் கேப்டனிடம் அனுமதி கேட்க, அவரும் ஏதோவொரு ப்ளோவில் ஓகே சொல்லி விட்டார். ஆனால் கேப்டனுக்கும் கேப்டன் ஆன பிக் பாஸ் இந்த அனுமதியை ரத்து செய்தார். ‘குண்டூசி எடுக்கறதுக்கு கூட அந்தப் பக்கம் திரும்பிப் போக முடியாது” என்று அவர் கறாராக சொல்ல, ‘அய்யோ.. அப்படியா?” என்று எல்லாவற்றையும் பையில் அடைத்துக் கொண்டார் ஜாக். ராணவ்வும் ஜாக்கும் இடம் மாறினார்கள். ‘ரைட்டு.. சைத்தான் சைக்கிள்ல வருது’ என்பது பாய்ஸ் டீமின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும். 

பெண்கள் அணி ஆரம்பித்த கலகம் – தரமான சம்பவம்

ஆண்கள் அணியிலிருந்து திரும்பி வருவதற்கு மறுத்து அடம்பிடித்தார் சவுந்தர்யா. பெண்கள் அணியில் இருந்து கொடுமைப்படுவதை விடவும் பாய்ஸ் டீம் சொர்க்கம் என்பதால் பள்ளிக்கூட பிள்ளை மாதிரி அவர் ஜாலியாக அடம்பிடிக்க, கையைப் பிடித்து இழுத்து பார்டரின் எதிரே தள்ளினார்கள். “எங்க தலைவி உங்களை பேசவே விடமாட்டாடா.. பாருங்கடா” என்று ஜாக்குலினை பங்கம் செய்தார் சவுந்தர்யா. பின்னர் அப்படித்தான் ஆயிற்று.

அன்ஷிதா எல்லை தாண்டுவதற்கு  சுவாரசியமான டாஸ்க் தந்தார் தீபக். ஒன்றிலிருந்து ஐம்பது வரை எண்ண வேண்டும். ஐந்தின் மடங்குகளில் வரும் எண்ணை மட்டும் சொல்லக்கூடாது. இது போன்ற வித்தியாசமான டாஸ்க்குகளை மற்றவர்களும் யோசிக்கலாம். 

பாய்ஸ் டீம் எதற்கெடுத்தாலும் டாஸ்க் செய்யச் சொல்வது பெண்கள் அணியை காண்டாக்கியிருக்க வேண்டும். ‘லிவ்விங் ஏரியா நம்ம கண்ட்ரோல்ல இருக்கு.  இனிமேலாவது அதை நாம பயன்படுத்தணும்.. பாய்ஸ் டீம் இந்தப் பக்கம் வரும் போதெல்லாம் டாஸ்க் செஞ்சுதான் ஆகணும்.. நம்மளை என்னா பாடு படுத்தறாங்க” என்று கொதித்தெழுந்தார் தர்ஷிகா. இதுதான் இன்றைய கலவரத்திற்கான விதை. ‘காக்கா இம்பூட்டு கக்கூஸ் போனதுக்காடா ஊரையே கொளுத்தினீங்க?” என்கிற காமெடி மாதிரி அன்றைய நாள் முழுக்க இந்தப் பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்தது. 

BB 8 Day 29

ஆனால் ஆண்கள் அணி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘டாஸ்க் லெட்டரை படிக்க வர்றது பொது விஷயம். அதுக்கெல்லாம் நாங்க ஏன் டாஸ்க் செய்யணும்? பொது விஷயத்திற்கு டாஸ்க் கூடாது. தனிநபராக வருகிறார் என்றால் டாஸ்க் ஓகே” என்று முத்து சொன்ன லாஜிக் சரியாக இருந்தது.  

இந்த விவாதத்தின் நடுவே தர்ஷிகாவிட்ட ஒரு வார்த்தை அவருக்கே எதிராக இருந்தது. ‘எல்லாத்துக்கும் நாங்க டாஸ்க் கேட்க மாட்டோம். மனிதாபிமான அடிப்படைல ஒருத்தர தூக்கிட்டுப் போறீங்கன்னா.. அப்பக்கூட டாஸ்க் செய்யச் சொல்ற அளவிற்கு நாங்க கெட்டவங்க இல்லை” என்பது போல் சொன்னார். சாச்சனாவிற்கு வயிற்று வலி என்கிற போது அவரை தூக்கிச் சென்ற அருண் அனுமதி கேட்கவில்லை என்று டீலை ரத்து செய்யச் சொல்லி போராடியவரும் இதே தர்ஷிகாதான். நம் சௌகரியத்திற்கு ஏற்ப விதியை எப்படியெல்லாம் வளைத்துக் கொள்கிறோம்?!

ஒரு பாட்டரி மாத்தறதுன்னா கூட ஸ்டோர் ரூம் வர வேண்டியிருக்கும். எல்லாத்துக்கும் டாஸ்க் பண்ண முடியுமா?” என்று பெண்கள் அணி கொதித்தெழ “ஓகே.. ஸ்டோர் ரூம் இன்சார்ஜா இருந்து நான் உங்களுக்கு எடுத்து தரேன். ஓகேவா?” என்று தீபக் சமாதானம் செய்ய பிரச்சினை தற்காலிகமாக அமைதியடைந்தது. 

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்குமா?!

இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷனை ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ். புதிய என்ட்ரிகளை நாமினேட் செய்ய முடியாது.  நேரடி நாமினேட் பவர் இருந்த சவுந்தர்யாவும், விஷாலும் முறையே விஷால் மற்றும் ஜாக்குலினை நாமினேட் செய்தார்கள்.  ‘ஒருத்தர் எப்படிங்க இவ்வளவு நல்லவரா இருக்க முடியும்.. கோபம் வந்தாலும அடக்கிக்கிறாரு” என்கிற காரணத்தைச் சொல்லி ரஞ்சித் மீது சரமாரியான வாக்குகள் விழுந்தன. ‘பீசு பீசா கிழிக்கும் போதும் ஏசு போல முகத்தைப் பாரு’ என்கிற மோடில் அனைத்தையும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டார் ரஞ்சித்.  சாச்சனா மீதும் வாக்குகள் குவிந்தன. 

கிஃப்ட் டாஸ்க்கின் போது அப்பா -மகள் சென்டியை ஓவராகப் பிழிந்த பவித்ராவும் ரஞ்சித்தும் கூட இப்போது பரஸ்பரம் நாமினேட் செய்து ஷாக் தந்தார்கள். (அப்படின்னா.. அத்தனையும் நடிப்பா கோப்பால்..?!)  “மற்றவர்களின் விஷயங்களில் அதிகமாக மூக்கை நுழைக்கிறார்’ என்கிற காரணத்தை NOSY என்று ஆங்கிலத்தில் சொல்லி முத்து மீது குத்தினார் சுனிதா.  ‘Biased’ ஆக இருக்கிறார் என்று ஆனந்திக்கும் வாக்குகள் விழுந்தன.  ‘இந்த வீட்டில் நடிக்கவே நடிக்காத ஃப்யூர் தங்கம்’ என்று சவுந்தர்யாவிற்கு சான்றிதழ் தந்தார் முத்து. என்னவொன்று அவ்வப்போது game off மோடிற்கு போய் விடுகிறாராம். 

BBTAMIL 8: DAY 29

ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள்  ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, ஆனந்தி, அன்ஷிதா, மற்றும் சுனிதா. (எப்படியும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம்!). 

நாமினேஷன் முடிந்ததும் ஆங்காங்கே விவாதம் நடந்தது. ‘என்னை ஏண்டா நாமினேட் பண்ணே?” என்கிற மாதிரி ராணவ்வை விளையாட்டாக குத்தப் போனார் சுனிதா. (கூடிய சீக்கிரம் ராணவ்விற்கு ஒரு ‘கவித’ கிடைக்கும் போல!) “வாரா வாரம் ஒவ்வொரு மாதிரி கேம் ஆடறான்” என்று முத்துவைப் பற்றி எரிச்சலுடன் பாராட்டிக் கொண்டிருந்தார் தர்ஷிகா. “பின்னாடி இருந்து வெளியே வாங்க” என்று பவித்ராவிற்கு டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் சிவக்குமார். 

ரயான் தன்னை நாமினேட் செய்ததற்கான காரணத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார் சாச்சனா. “நீங்க சொல்றது ஒண்ணு.. செய்யறது ஒண்ணா.. இருக்கு… வெளில இருந்து பார்க்கறப்ப நல்லா தெரியுது” என்று அவர் விளக்கம் தந்து கொண்டிருந்தார்.

‘அஞ்சு செகண்ட்ல வெளிய ஓடணும்’ – பெண்கள் போட்ட ஓவரான ரூல்

பொழுது போகாத பொம்மு போல மீண்டும் டாஸ்க் விவாதத்தைக் கையில் எடுத்தார்கள் பெண்கள். “நம்ம சைடு வர்றதுக்கு அவங்க பர்மிஷனே கேக்க மாட்றாங்க.. ஆனா அவங்க பக்கம் போறதுக்கு ஒவ்வொண்ணுக்கும் டாஸ்க்காம். நாம மட்டும் என்ன தக்காளி தொக்கா?” என்று பொருமிய பெண்கள் அணி “பிக் பாஸ் கூப்பிட்டு லிவ்விங் ரூம் வந்து உக்கார்றவங்க அப்படியே உக்காந்துடறாங்க” என்கிற காரணத்திற்காக ஐந்தே நொடிகளில் அவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று போட்ட விதி ரொம்பவே ஓவர். 

இதை அவர்கள் கேப்டன் சத்யாவிடம் சொல்ல, அவரே ‘ஐந்து நொடி’ அபத்தத்தை மறுத்திருக்கலாம். ஆனால் அப்படியே காெண்டு போய் கிளிப்பிள்ளை போல பாய்ஸ் டீமிடம் சொல்ல “அப்ப அவங்களும் கிச்சன் பக்கம் வந்தா மூணே செகண்ட்ல தட்டைக் கழுவிட்டு போயிடணும்.. ஓகேவா?” என்று சரியான எதிர் பாயின்ட்டை முன்வைத்தார் அருண். முத்துவிடமிருந்து விலகிய பிறகு இப்போதெல்லாம் அருண் புத்தசாலித்தனமாக ரியாக்ட் செய்கிறார்.  “பெண்கள்லாம் கொடுத்த வாக்கை காப்பாத்தறவங்க’ என்று பழைய டீலை மனதில் வைத்தபடி சர்காஸம் செய்தார் முத்து. 

BBTAMIL 8: DAY 29

ஷாப்பிங் டாஸ்க். கயிறு மூலம் இணைக்கப்பட்டிருக்கும் பந்தை பேலன்ஸ் செய்து நகர்த்தி குழிக்குள் போட வேண்டும். “பெண்கள் அணி எல்லாத்திலயும் முன்னாடி இருக்காங்க. ஷாப்பிங் டாஸ்க் மட்டும்தான் பாக்கி. பார்த்துக்குங்க பசங்களா” என்று பிக் பாஸ் எச்சரித்த நேரம் ஏழரையாக இருக்க வேண்டும். அவர் வாய் வைத்து விட்டதால், ஆண்கள் அணி சொதப்பியது. (இல்லையென்றாலும் சொதப்பியிருப்பார்கள்). பெண்கள் சிறப்பாக விளையாடி 7000 புள்ளிகள் சேகரிக்க, ஆண்களால் 3000 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. இந்த விளையாட்டில் வர்ஷினி இரண்டு வாய்ப்புகளையும் தவற விட்டார். புதிய என்ட்ரிகளில் விரைவில் வெளியேறக்கூடிய நபராக அவர் இருக்கலாம்.  அத்தனை டம்மி பாவாவாக இருக்கிறார். 

ஷாப்பிங் டைம். காசு கம்மியாக இருக்கிற ஆண்கள், பார்த்து பார்த்து பொருட்களை எடுக்க, பெண்களோ ஏழாயிரம் இருக்கிற மிதப்பில் அள்ளிக் கொண்டார்கள்.  ஷாப்பிங் சரியாக நடந்ததா என்பது அப்புறம்தான் தெரியும்.  கணக்குப் போடுவதில் சவுந்தர்யா நிறைய தடுமாறினார். 

இழுபறியாகச் சென்ற பேரம் – சவுந்தர்யாவின் அலப்பறை

‘குத்தினா, கத்துவேன்.. கத்தினா குத்துவேன்’ என்கிற மாதிரி டீல் விளையாட்டு மறுபடியும் தொடர்ந்தது. ‘அஞ்சு செகண்ட்ல ஓடறதுக்கு நாங்க என்ன ஒலிம்பிக்லயா இருக்கோம்.. 30 செகண்ட் ஓகேவா?” என்று அடுத்த டீலை கொண்டு வந்தார் கேப்டன் சத்யா. “அதெல்லாம் முடியாது. கால்ல அடிபட்டிருக்கறதால தீபக் அண்ணாவிற்கு மட்டும் ஸ்பெஷல் பர்மிஷன் தரோம்” என்று பெண்கள் அணி அடம் பிடித்தது. 

இந்த பேரம் இழுபறியாகச் சென்றதால் ஆனந்தி ஒரு ஐடியா கொடுத்தார்.  “ஓகே.. 20 செகண்ட் கூட எடுத்துக்கங்க.. ஆனா ஹூக் ஸ்டெப் போட்டுக்கிட்டே போகணும்” என்று விஷாலிடம் அவர் சொல்ல “ஓகே.. டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்” என்று அவர் சென்றார். “ஏன் இவ்ள நேரம் இழுக்கறீங்க?” என்று சலித்துக் கொண்டார் சவுந்தர்யா. 

ஜாக்கை வெளியே அனுப்பி விட்டு பாய்ஸ் டீம் விவாதிக்க ஆரம்பித்தார்கள். “டாஸ்க்லாம் பண்ண முடியாதுன்னு சொல்லிடலாம்” என்று அதிரடியாக ஆரமபித்தார் அருண்.  “இந்த அருண் கிட்ட பேசவே முடியல. தெரியாம சொல்லிட்டேன். ‘நல்லா விளையாடுன்னு’.. எனக்கே இம்சை தரான்” என்கிற மாதிரி வெளியே சென்று பெண்களிடம் சலித்துக் கொண்டார் ஜாக். “அடுத்த வாரம் நான் பெண்கள் அணிக்கு போறேன்..  நாம டிஸ்கஸ் பண்றப்ப ஜாக் இங்க இருக்கக்கூடாது” என்று அருண் காட்டமாக அறிவித்தார். 

BBTAMIL 8: DAY 29

ஆண்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வந்த ஜாக், “ஆக்சுவலி.. அவங்க என்ன சொல்றாங்கன்னா.. “ என்று ஆரம்பிக்க “யம்மா.. நாங்க இன்னமும் பேசி முடிக்கலை. கிளம்புங்க காத்து வரட்டும்” என்கிற மாதிரி அருண் சொல்ல,  “அருண்.. நீங்க பேசறது ஹார்ஷா இருக்கு” என்று ஜாக் ஆட்சேபிக்க “ஓகே.. போங்க.. இப்ப ஓகேவா?” என்று அருண் நக்கலடிக்க “க்யூட்டா இருக்கு” என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு விலகினார் ஜாக். “நாம விவாதிக்கறப்ப ஜாக் இங்க இருந்தா என்ன நடக்கும்ன்றதுக்கு இதுதான் சாம்பிள்.. பாத்துக்கிட்டீங்களா?” என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார் முத்து. 

“ஒரு சின்ன டீலை காலைல இருந்தா இழுப்பீங்க.. என்னால தாங்க முடியலை குருநாதா” என்று எரிச்சலான சவுந்தர்யா, கிச்சன் ஏரியாவில் பப்பரப்பே என்று அமர்ந்து விட்டார்.  “ஏன் சவுந்தர்யா.. இப்படிப் பண்றே..  முடிவெடுக்கறதுக்கு டைம் வேணாமா?” என்று கெஞ்ச ஆரம்பித்த கேப்டன் சத்யா, சவுந்தர்யாவின் அலப்பறையைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சூடாகி ஒரு கட்டத்தில் நரம்பு புடைக்க கத்த ஆரம்பித்து விட்டார். “டேய் மச்சான். கூல்டவுன். நம்மள provoke பண்ணப் பாாக்கறாங்க.. மாட்டிக்காத” என்பது மாதிரி சத்யாவின் காதில் கிசுகிசுத்தார் முத்து. 

சத்யாவின் மண்டையில் தாமதமாக எரிந்த பல்பு

இந்தச் சண்டை மேலும் தொடர “டேய் பெரியவனே.. என்னதான் முடிவெடுத்திருக்கே .. இப்பவாவது சொல்லித் தொலையேண்டா.. போட்டு உடைச்சுடு” என்று ‘ஆனந்தம்’ படத்தின் மம்முட்டியை ஸ்ரீவித்யா  விசாரிப்பது மாதிரி சத்யாவை பெண்கள் அணி கேட்டது.  ‘நாங்களும் நிறைய இறங்கி வந்தோம். ஆனா நீங்க முடிவைச் சொல்ற வழியே தெரியலையே?” என்று வாதிட்டார் மஞ்சரி. புதிய என்ட்ரிகளில் அதிக சுதாரிப்பாக இருப்பவர் இவரே. 

இந்தச் சமயத்தில்தான் சத்யாவின் மூளையில் பல்ப் எரிந்திருக்க வேண்டும்.  தர வேண்டிய பதிலை சரியாகச் சொன்னார் சத்யா. இதை ஆண்கள் அணி எப்போதோ கேட்டிருக்க வேண்டும். ‘வீட்டுக்குள் வந்தப்ப ஒரு டீல் போட்டீங்கள்ல.. அதை இன்னமும் நிறைவேத்தாம நீங்க இவ்ள நாள் இழுக்கறீங்க..  இப்ப மட்டும் சொல்யூஷன் உடனே வேணும்னா எப்படி?” என்று பெண்கள் டீமை அவர் மடக்கியது சரியான பாயிண்ட். 

BBTAMIL 8: DAY 29

“டாஸ்க் செய்ய மூட் இருக்கறவங்க செய்யட்டும். மத்தவங்களை வற்புறுத்தாதீங்க” என்று முத்து சுனிதாவிடம் சொல்ல,  ‘இந்தப் பாயிண்ட்டை முன்னாடியே சொல்லியிருக்கலாமே?” என்று சுனிதா வியக்க “ஜாக் இதைச் சொல்லலலியா?” என்று முத்து கோர்த்து விட, ஜாக் அழைத்து விசாரிக்கப்பட்டார். “ப்ரோ.. நான் சொன்னேன்.. ப்ரோ” என்று சாதித்தார் ஜாக்குலின்.  உண்மையில் முத்து சொன்ன ஐடியாவும் சொதப்பல்தான். ‘இஷ்டம் இருக்கறவங்க மட்டும் செய்யட்டும்’ என்று சொல்வதெல்லாம் ஒரு டீலா?! அதற்கு சுனிதா வேறு தலையை ஆட்டுகிறார். 

‘இத்தனை நாள் எங்களை நீங்க எப்படில்லாம் பண்ணீங்க… ஒரு நாள். ஒரேயொரு நாள்.. நாங்க டாஸ்க் பண்ணச் சொன்னா.. இவ்வளவு ராவடி பண்ணுவீங்களா.. சரிடா.. ஓகேடா. நாங்க கிச்சன் பக்கமே வரமாட்டோம்.. என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம்” என்று பிரச்சினைக்கு முடிவு கட்ட ஆவேசமாக பேசினார் தர்ஷிகா. “அப்ப.. எனக்கு பசிக்கும்ல” என்கிற வீடியோ மீம் சிறுவன் மாதிரி “அது எப்படி பட்டினியா இருக்க முடியும்?” என்று ஜாக்கிரதையாக கேட்டு வைத்துக் கொண்டார் வர்ஷினி. (ம்ஹூம்.. இந்தப் பொண்ணு தேறாது.. இன்னொரு டைப் சவுந்தர்யாவா இருக்காங்கப்பா!) 

ஆனந்தியைக் கலாய்த்த பாய்ஸ் டீம்

“ரூல் புக்கை கொடுங்க” என்று பாய்ஸ் டீமிடம் ஆனந்தி வந்து நிற்க, “உன்னையெல்லாம் நம்ப முடியாது.. வீட்ல பெரியவங்க யாரையாவது அனுப்பு. போ” என்பது மாதிரி ஆண்கள் டீம் கலாய்க்க “ரூல் புக்குன்றது பொதுவான பிராப்பர்ட்டி. அதைக் கேட்டதுக்கு கூட கலாய்ச்சா என்ன அர்த்தம்?” என்று ஆனந்தி போர்க்கொடி தூக்க “யம்மா.. தாயே. அது காமெடியா சொன்னது.. திடீர்ன்னு நீங்க சீரியஸ் ஆவிங்கன்னு எங்களுக்கு என்ன தெரியும். சரி மன்னிச்சிடுங்க” என்று தீபக்கும் முத்துவும் ஆனந்தியிடம் மன்னிப்பு கேட்டார்கள். 

BBTAMIL 8: DAY 29

ஆனந்தி விவாதித்தது சரியான விஷயம்தான். என்றாலும் ஆண்கள் செய்த ராவடி காரணமாக பின்பு பெண்களிடம் சொல்லி அழ ஆரம்பித்து விட்டார். ஆக.. பெண்கள் ஆரம்பித்து வைத்த கலகம் காரணமாக இன்றைய பொழுது சிறப்பாகப் போனது. பெண்களுக்கு ஆயிரம் டாஸ்க் கொடுக்கும் ஆண்கள், எதிர் தரப்பு சொல்லும் டீலை ஒப்புக் கொள்ளாமல் இழுப்பதற்கு  ஆண் என்கிற அகங்காரம் மறைமுக காரணமாக இருக்கலாம். பெண்களும் பதிலுக்குப் பதில் டாஸ்க் தந்தால்தான் ஆட்டம் இன்னமும் சுவாரசியமாகும். 

தாமதமாக யோசித்திருந்தாலும் பெண்கள் அணி எடுத்திருக்கும் சிறப்பான மூவ் இது. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.