உறுதியானது ஐபிஎல் 2025 மெகா ஏல தேதிகள்! இந்த முறை கூடுதல் சிறப்பு! ஏன் தெரியுமா?

ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக பார்த்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த டெஸ்டின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் ஏலம் நடைபெறுகிறது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த ஆண்டு ஏலத்தில் கூடுதல் சிறப்பாக பல இந்திய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் இடம் பெற உள்ளனர். ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கியமான வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். இவர்களை டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்கவைக்கவில்லை.

இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் இரண்டாவது ஐபிஎல் ஏலம் இதுவாகும். கடந்த முறை நடைபெற்ற 2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் பங்குபெறுவதற்கான வீரர்களின் பதிவு காலம் நவம்பர் 4ம் தேதியுடன் முடிவடைந்தது. உலகம் முழுவதில் இருந்தும் மொத்தம் 320 கேப் செய்யப்பட்ட வீரர்கள், 1224 அன்கேப்ட் வீரர்கள் மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஏலம் தொடங்கும் முன்பு ஒவ்வொரு அணியும் 4-5 வீரர்களை தக்க வைத்துள்ளனர். மொத்தமாக 558.5 கோடி ரூபாய் செலவில் 46 வீரர்களை 10 அணிகள் தக்க வைத்துள்ளனர். ஏலத்தில் ரூ.641.5 கோடிக்கு வீரர்கள் வாங்கப்பட உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. ஒரு சில அணிகள் 4 வீரர்களையும், ஒருசில அணிகள் 5 வீரர்களையும் தக்க வைத்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணி 2 பேரை மட்டும் தக்க வைத்து ரூ.110.5 கோடியுடன் ஏலத்திற்கு வருகிறது.

9.5 கோடிக்கு ஷஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகிய இரண்டு அன்கேப்ட் வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது பஞ்சாப் அணி. இதனால் ஏலத்தில் உள்ள பல முக்கியமான வீரர்களை தட்டி தூக்க உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 41 கோடி ரூபாய் ஏல பர்ஸ் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.51 கோடி மீதம் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களிடம் இருந்த அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இரண்டு முக்கிய ஸ்பின்னர்களை தக்கவைக்கவில்லை. அவர்கள் 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையில் ஏலத்தில் உள்ளனர். மேலும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் 1.25 கோடி ரூபாய்க்கு தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சன், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியால் தக்கவைக்கப்படவில்லை. மறுபுறம், 2024 மினி ஏலத்தில் ரூ. 24.50 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் தக்கவைக்கப்படவில்லை. மேலும் இளம் இந்திய பந்து வீச்சாளர்களான கலீல் அகமது, தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், இஷான் கிஷன், முகேஷ் குமார், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, டி நடராஜன், தேவ்தத் படிக்கல், க்ருணால் பாண்டியா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் ஏலத்தில் இடம் பெற உள்ளனர். ஒவ்வொரு ஐபிஎல் அணியும் மொத்தமாக 25 வீரர்கள் வரை தங்கள் அணியில் எடுக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.