உ.பி.யின் பரேலி நகரில் தடையை மீறி எருமைகள் சண்டை நிகழ்ச்சி: மேனகா காந்தி புகாரில் நிகழ்ச்சியாளர்கள் மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி: வட மாநிலங்களில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாக பரேலியில் எருமைகள் சண்டை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை முடிந்த கோவர்தன் பூஜை அன்று ராணுவக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற எருமைகள் சண்டை நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாயின. அதில், இரண்டு எருமைகள் ஆவேசமாக மோதிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அங்கு சுற்றியிருந்த மக்கள்கைகளில் கம்புகளை வைத்துக் கொண்டு எருமைகள் ஓடிவிடாமல் இரண்டும் மோதிக் கொள்ள தூண்டுகின்றனர். இந்த மோதலில் ரத்தக்காயங்களுடன் எருமைகள் சண்டையிடுவதை கூட்டத்தினர் ஆரவாரமிட்டு உற்சாகமடைகின்றனர்.

இந்நிகழ்ச்சி பல ஆண்டுகளாக கலாச்சாரத்தின் அடிப்படையில் நடைபெறுவதாக கூறுகின்றனர். இதில் சில நேரங்களில் எருமைகள் இறந்து போவதும் உண்டு. இதுதொடர்பான புகார்கள் வந்ததால், 4 ஆண்டுகளுக்கு முன்பு எருமைகள் சண்டைக்கு தடையும் விதிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி இந்நிகழ்ச்சி மீண்டும் இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ளது.

எருமைகளின் உரிமையாளர்கள் பணம் கட்டி பந்தயமும் நடத்தி உள்ளனர். இதில், பல லட்சம் ரூபாய் புழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ (பிஎப்ஏ) சார்பில் பரேலி மாவட்ட ஆட்சியரிடம் பிஎப்ஏ அமைப்பின் நிறுவனர் மேனகா காந்தி புகார் அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட ராணுவக் குடியிருப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. இப்புகாரின் மீது தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கலாச்சாரத்தின் பெயரில் தீபாவளிக்கு பிறகு பலவிதமான நிகழ்ச்சிகள் உ.பி., ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகின்றன. பசு மாடுகளைஓடவிட்டு அதன் அடியில் பொதுமக்கள் குப்புறப்படுக்கும் நிகழ்ச்சியும் ஒன்று. அப்போது பசு மாடுகளின் கால்களில் மிதிபட்டு காயம் ஏற்படுகிறது. இதன்மூலம் தமது பாவங்கள் தீர்ந்ததாக மகிழ்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.