சாத்தூர் அருகே கடப்பா கல் ஏற்றிச் சென்ற ஆட்டோ, பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு வயது சிறுவன் பலியானான். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் காளிச்சாமி (வயது 37). இவருக்கு ராமலட்சுமி (34) என்ற மனைவியும் கபில் ஆர்யா (7) மற்றும் விஜயதர்ஷன் (4) என இரண்டு மகன்களும் உள்ளனர். காளிச்சாமி வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை பொருத்தும் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் காளிச்சாமி தன்னுடைய வீட்டில் இருந்த சின்ன, சின்ன பராமரிப்பு பணிகளை இன்று கவனித்தார். இதில் வீட்டின் தேவைக்காக கடப்பாக்கல் எடுத்துவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக தன்னுடைய உறவினரின் லோடு ஆட்டோவில் தன்னுடைய இரண்டு மகன்களுடன் ஏழாயிரம்பண்ணைக்கு சென்று கடப்பாக்கல் விலைக்கு வாங்கிக்கொண்டு திரும்பி வந்துள்ளார். அவர்கள் ஏழாயிரம்பண்ணை அடுத்து உள்ள வெள்ளையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது முன்னால் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லோடு ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்த அவரின் இரண்டு மகன்கள் மீதும் கடப்பாக்கல் விழுந்துள்ளது. இதில் விஜய தர்ஷனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.
மேலும், கபில் ஆர்யா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் மீது லோடு ஆட்டோ மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்- தம்பி இருவரும் விபத்தில் சிக்கி அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.