நாட்டின் இரண்டாவது பெண்மணி.. அமெரிக்க அரசியலில் கவனம் பெற்ற இந்திய வம்சாவளி பெண் உஷா சிலுக்குரி

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 280 எலக்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க ஜனாதிபதி பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் கைப்பற்றி உள்ளார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். மீதமுள்ள சில மாநிலங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றுள்ளார். இவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றியபோது மேடையில் நின்றிருந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி ‘இனி நான் உங்களை துணை ஜனாதிபதி என்று அழைக்கலாம்’ என்று கூறினார். அத்துடன் அவரது மனைவி உஷா சிலுக்குரிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம், ஜே.டி.வான்ஸை குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததை அடுத்து உஷா சிலுக்குரி கவனம் பெற்றார்.

இப்போது ஜே.டி. வான்ஸ் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை உஷா சிலுக்குரி வான்ஸ் பெறுகிறார்.

உஷா சிலுக்குரி, ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் பெற்றோர், 70களில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான்டியாகோ பகுதியில் குடியேறினர். பிறந்தது முதல் அங்கேயே வசித்து வரும் உஷா, அமெரிக்காவின் தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2014-ல் குடியரசு கட்சியில் இணைந்தார். உஷா யேல் சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஜே.டி.வான்சுடன் அறிமுகம் ஏற்பட்டது. இவர்களுக்கு மத்தியில் காதல் ஏற்பட்டு, 2014-ல் கென்டக்கி நகரத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது உஷா – ஜே.டி.வான்ஸ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஜே.டி. வான்ஸ் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவரது மனைவி உஷா சிலுக்குரியின் பூர்வீக ஊரான வட்லூருவில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.