மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த அதிமுக மற்றும் திமுக கட்சிகளே போட்டியிட தயக்கம் காட்டிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் இத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தது.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில மராத்திய அமைப்புகள் சேர்ந்தன. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் கலந்து கொண்டார். மராத்திய தலித் அமைப்புகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக போட்டியிடவும் விருப்பம் தெரிவித்தன. இதையடுத்து மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதியில் போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்தது. அதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 6 தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மகாராஷ்டிரா பொறுப்பாளர் சாலமோன் ராஜாவிடம் பேசியபோது, ”எங்களது கட்சி மும்பையில் போட்டியிட திட்டமிட்டது. ஆனால் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் மும்பையில் போட்டியிடவில்லை. ஆனால் எங்களது கட்சியில் இணைந்த மராத்தி அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் மிகவும் செல்வாக்குடன் இருப்பதை பார்த்து அதனால் கவரப்பட்டு மராத்திய தலித் அமைப்புகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.
மும்பையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தொல்.திருமாவளவன் விரைவில் மும்பை வர இருக்கிறார். அவர் மும்பை வரும்போது மகாராஷ்டிராவில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒளரங்காபாத் கிழக்கு, பிம்ப்ரி, புலம்பரி, ஹின்கோலி, கலம்னுரி, போகர்தான் ஆகிய தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றன.
மகாராஷ்டிராவில் தற்போது தலித் அமைப்புகள், கட்சிகள் அதிக அளவில் இருந்தாலும் அந்த கட்சிகள் பெரிய அளவில் முன்னேற முடியாமல் இருக்கின்றன. பிரகாஷ் அம்பேத்கர் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற அமைப்பைக்கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுகிறார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசினால் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத அளவுக்கு பிரகாஷ் அம்பேத்கர் தொகுதிகளை கேட்கிறார். மற்றொரு தலித் தலைவரான ராம்தாஸ் அதாவலே பா.ஜ.கவோடு சேர்ந்து ஒரு அமைச்சர் பதவியை மட்டும் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட்டார். இதனால் மகாராஷ்டிராவில் தனது கட்சியை விரிவுபடுத்தும் வேலையில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb