விழுப்புரம்: பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ரவீந்திரன் துரைசாமி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்களின் சாதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக திண்டிவனம் அருகேயுள்ள ரோஷணை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., புகாரளித்தார்.
இந்தப் புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாத நிலையில் ரவீந்திரன் துரைசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ரவீந்திரன் துரைசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டது.
அத்துடன் வழக்கு நிலுவையில் உள்ள திண்டிவனம் குற்றவியல் முதன்மை நீதிமன்றம் 1-ல் ஜாமீன்தாரர்களுடன் ஆஜராகி ஜாமீனை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் குற்றவியல் முதன்மை நீதிமன்றம் 1-ல் ரவீந்திரன் துரைசாமி இன்று ஜாமீன்தாரர்களுடன் ஆஜரானார். அவருக்கு மறு உத்தரவு வரும் வரை ரோஷணை காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.