2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு இலவச சீருடைத் துணிகளை வழங்குவதற்கு தேவையான மொத்த துணிகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய, அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை சீருடைத் துணிகளை உரிய நேரத்தில் வழங்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சீருடைத் துணியை வழங்குவதற்கான சீன அரசின் நன்கொடையைப் பொருப்பேற்பதற்காக கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.