`அமரன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் முகுந்த் வரதராஜன் ரவி ஷங்கரிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் காட்சி நம்மை கலங்கடித்திருந்தது. அந்த காட்சியில் மட்டுமல்ல படத்தின் அத்தனை காட்சிகளிலும் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் லல்லு. அமரனுக்காக அவருடன் குட்டி சாட் போட்டோம்…..
`அமரன்’ வெற்றி உங்களுக்கு எந்தளவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு?
பலருக்கும் படம் ரொம்பவே பர்சனலாக இருந்தாகச் சொல்றாங்க. பல ராணுவ திரைப்படங்கள் நாம் போர் சார்ந்ததாக இருந்துதான் பார்த்திருப்போம். ஆனால், இந்த `அமரன்’ திரைப்படம் வேறு ஒரு பக்கத்தையும் பேசுகிறது. அந்த வகையில எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. இது முகுந்த் வரதராஜன் பற்றிய திரைப்படம். இந்தப் படம் அவருக்கு நல்ல டிரிபூட் கொடுக்கிற திரைப்படமாக வந்திருக்கு. இந்த படத்தின் மூலமாக எனக்கு என்ன விஷயங்கள் கிடைச்சிருக்கு, கிடைக்கப்போகுதுன்னு யோசிக்கிற இடத்துக்குள்ள நான் போக வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனால், நண்பர்கள், உறவினர்கள்னு பலரும் முக்கியமான படத்துல முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்கன்னு சொல்லி பாராட்டினாங்க. அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. முக்கியமாக, இதுவரை படங்கள்ல கதாநாயகனோட ஃப்ரண்ட் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். அந்த கதாபாத்திரத்துக்கு பெயர்கூட இருக்காது. ஆனால், இன்னைக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைச்சிருக்கு. அந்த கதாபாத்திரத்தின் பெயர் மக்கள் மனதில் பதிந்திருக்குன்னு நினைக்கும்போகுது ரொம்ப மகிழ்ச்சி. இப்போத்`அமரன்’ படத்தை என்னுடைய முதல் திரைப்படம் போல் உணர்கிறேன்!
`ரங்கூன்’ படத்துல உங்களுக்கு ரொம்பவே முக்கியமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தைக் கொடுக்கிறதுக்கு பெரிய நம்பிக்கை இயக்குநருக்கு வரணும். ராஜ்குமார் பெரியசாமிக்கு அந்த நம்பிக்கை எப்படி கொடுத்தீங்க?
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்னுடைய குறும்படத்தை பார்த்துட்டுதான் `ரங்கூன்’ படத்திற்கு நடிக்கக் கூப்பிட்டார். அப்போ முழுக்கதையைப் படிக்கக் கொடுத்தார். அதுல பெரிய கதாபாத்திரமும் எனக்குக் கொடுத்தாரு. இப்போ மறுபடியும் `அமரன்’ கொடுத்திருக்கார். `சர்கார்’, `கைதி’ போன்ற நான் நடிச்சிருக்கிற படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகியிருக்கு. இப்போ `அமரன்’. இப்படியான முக்கியமான படங்கள்ல முக்கிய பங்காக இருக்கிறோம்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கு. கோவிட் சமயத்துல மொத்தமாக நான் ஊருக்கு போயிட்டேன். திரும்ப ஊருக்கு வந்தால் முதல்ல இருந்து கரியரை தொடங்கணும். என்ன பண்றதுனு தெரியாமல் இருக்கும்போதுதான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தைப் பற்றி சொன்னார். கதைக்களம் காஷ்மீர்ல நடக்கிறது. அதனால காஷ்மீருக்கு போகணும். அந்தப் பகுதியோட குளிரைத் தாங்கணும். அதுக்காக சில பொருட்களெல்லாம் வாங்கியாகணுமில்லையா…. எல்லோரும் லோன் போட்டு படிக்க போவாங்க. நான் லோன் போட்டு `அமரன்’ படத்துல நடிக்க போனேன். சினிமாவுல இருக்கும்போது தொடர்ந்து பணம் வராது. சரியான பொருளாதார நிலையும் இருக்காது. அப்படி `அமரன்’ படத்துக்குள்ள போனேன். இன்னைக்கு என்னுடைய கரியரைத் திரும்பவும் இந்த படம் தொடங்கி வச்சிருக்கு.
க்ளைமேக்ஸ்ல முகுந்த் வரதராஜன் கடைசியாக முக்கியமான ஒரு தகவலை ரவி ஷங்கராகிய உங்ககிட்ட பகிர்ந்துகிற காட்சி ரொம்பவே பாதிப்படைய வச்சிருக்கு? அதை படமாக்கும்போது எந்தளவுக்கு மனதை இறுக்கமாக்குச்சு?
அந்த காட்சியின் மூலமாக அந்த தருணத்தில் முகுந்த் சார்கூட இருந்தவங்க என்ன மனநிலைல இருந்தாங்கனு புரிஞ்சுக்க முடிஞ்சது. உயிர் எல்லோருக்கும் முக்கியம். ஆனால், நாட்டுக்காக அதைத் தியாகம் பண்றாங்க. அந்தத் தருணம் முகுந்த் சார் குடும்பத்துக்கு எப்படியான வலியைக் கொடுத்திருக்கும்னு என்னால இந்தக் காட்சி மூலமாக புரிஞ்சுகிட்டேன். `அச்சமில்லை அச்சமில்லை’ பாடலை நாங்க பாடுற காட்சி ரொம்பவே பவர்ஃபுல்லானது. அது ரொம்பவே ஸ்பெஷலானது. படத்துல ஒவ்வொரு எமோஷனல் தருணமும் ரியல் வாழ்க்கையிலிருந்து கனெக்ட் செய்யப்பட்டதாக இருக்கும்.
சிவகார்த்திகேயன் என்னென்ன விஷயங்கள் உங்க கதாபாத்திரம் பற்றி சொன்னார்?
இன்னைக்கு தியேட்டர்ல பலரும் படம் பார்த்துட்டு வேற மாதிரியான ஒரு சிவகார்த்திகேயனை பார்க்கிறோம்னு சொல்றாங்க. அதை நாங்க ஷூட்டிங்லேயே பார்த்துட்டோம். படத்துக்காக பல கடின முயற்சிகளை அவர் மேற்கொண்டிருக்கார். நம்ம சாதரணமாக ஜிம் போயிட்டு வந்தாலே டென்ஷன் ஆகுதுன்னு சொல்லிட்டு இருப்போம். ஆனால், அவர் அந்த கடினமான வேலைகளைப் பார்த்துட்டு வந்து எங்ககூட ஜாலியாக பேசிட்டு இருப்பார். `ரங்கூன்’ படத்தோட முதல் ஷோவை அவர் பார்த்துட்டு வாழ்த்தினார். இந்தப் படம் முடிச்சிட்டு நான் அவர்கூட விமானத்துல சேர்ந்து வர்ற வாய்ப்பு கிடைச்சது. அப்போ அவர், `எல்லாமே கனெக்டெட்டாக இருக்கும். இப்போ நீங்க ரங்கூன் பண்ணினதுனால இந்தப் படத்தோட வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதே மாதிரி இந்தப் படம் மூலமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்’னு சொன்னார்.
`ரங்கூன்’ மாதிரியான படங்கள்ல பெரிய கதாபாத்திரம் பண்ணிட்டு, பெரிய படங்கள்ல சின்ன கதாபாத்திரங்கள் பண்ற விஷயம் உங்களுக்குக் கவலை அளிக்கிறதா?
பழைய மாதிரி படங்கள்ல நடிக்கணும், டான்ஸ் பண்ணனும், காமெடி பண்ணனும்னு ஆசைகள் இருக்கு. இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் மட்டும் பண்ணலாம்னு நினைப்போம். இங்க சர்வைவல்னு ஒரு விஷயம் இருக்கு. நிதர்சன வடிவம் என்னதுனு நமக்கு தெரியும். இதுக்கு முன்னாடி பண்ணின படங்கள் மூலமாக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்போ இதன் மூலமாக இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். `சங்கத்தமிழன்’ படத்துல நடிக்கும்போது `அனைத்து கதாபாத்திரங்களும் பண்ணுங்க. எதாவது ஒரு ரூட் ஓபன் ஆகும்’னு விஜய் சேதுபதி சாரும் சொன்னார்.