இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில், புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 12 ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று வந்த இந்திய அணியின் சாதனை முறியடிக்கப்பட்டது. பிறகு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வி இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து தொடர் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் இந்தியா 14 போட்டிகளுக்குப் பிறகு 58.33 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா அணி 62.50 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இலங்கை 55.56 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் தற்போது உள்ளன. இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பு இந்திய அணி முதல் இடத்தில் வலுவாக இருந்தது, நிச்சயம் இறுதிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற்றுவிடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் நியூசிலாந்து தொடருக்குப் பிறகு முடிவுகள் அப்படியே மாறி உள்ளது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
THE QUALIFICATION PATH FOR TEAM INDIA INTO WTC FINAL
– A big Test awaits for Captain Rohit Sharma. pic.twitter.com/XbV8U3JXaQ
— Johns. (@CricCrazyJohns) November 6, 2024
WTC இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி வலுவாக வெற்றி பெற வேண்டும். மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விடும். இதனை செய்ய தவறினால், மற்ற தொடர்களில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காக இந்தியா காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் நியூசிலாந்து தொடரில் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்டில் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும்.