குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் புகைப்படம் அச்சிட்ட டி-சர்ட்கள் சமீபத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. மீஷோ மற்றும் பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் வெப்சைட்களில் அவை விற்பனை செய்யப்படுவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியானது. தற்போது தாவூத் இப்ராகிம் படம் அச்சிட்ட டி-சர்ட்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிமினல்களை இது போன்ற வெப்சைட்கள் பிரபலப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா சைபர் பிரிவு போலீஸார் அது போன்ற உடைகளை விற்பனை செய்யும் வெப்சைட்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தாவூத் இப்ராகிம், லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற கிரிமினல்களின் புகைப்படங்கள் அச்சிட்ட டி-சர்ட்களை பிளிப்கார்ட், அலி எக்ஸ்பிரஸ் போன்ற இகாமர்ஸ் வெப்சைட்கள் விற்பனை செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய், தாவூத் இப்ராகிம் ஆகியோர் ஒருங்கிணைந்த குற்றம், மிரட்டி பணம் பறித்தல், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்களின் படங்கள் அச்சிட்ட டி-சர்ட் விற்பனை செய்யப்படுவது கவலையளிக்கிறது. இது போன்ற டிசர்ட் விற்பனை செய்யப்படுவதால் கிரிமினல்களை இளைஞர்கள் தங்களது ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளும் அபாயம் இருக்கிறது.
எனவே தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் இது போன்ற டி-சர்ட்களை விற்பனை செய்யும் வெப்சைட்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோசியல் மீடியா மற்றும் டிஜிட்டல் தளங்கள், இ காமர்ஸ் வெப்சைட்களை சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்” என்றார்.