`எழுத்தாளராக வேண்டுமென ஸ்கெட்ச் போட்டு வேலைசெய்வது முட்டாள்தனம்' – லஷ்மி சரவணகுமார் நேர்காணல்

எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் நேர்காணல். பகுதி- 3

நிலப்பரப்புக்கும் பழங்குடி மக்களுக்கும் இருக்கும் பிணைப்பை அரசுகள் புரிந்து கொள்வதே இல்லையா?

இந்தியா முழுவதும் சாலைகள் சீரமைக்கும் தொழிலாளர்கள், கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட பழங்குடி மக்கள்தான். வனப்பாதுகாப்புச் சட்டங்களால் அவர்களது வேட்டையாடும் உரிமை பறிக்கப்பட்டது, காட்டில் வாழும் உரிமை பறிக்கப்படுகிறது. அரசு அவர்களை வெளியில் கூட்டிவந்து அவர்களுக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என நினைக்கிறது.

காட்டில் வாழும் மக்களின் வாழ்க்கையை அதற்குள் இருந்துதான் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமே தவிர, காட்டிலிருந்து அவர்களை முழுமையாகத் துண்டிக்கக்கூடாது. காடு சார்ந்த எல்லா அறிவும் பழங்குடி மக்களுக்குத்தான் இருக்கிறது. அரசு அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். நம் பழங்குடி மக்களின் காடு சார்ந்த அறிவு பற்றி நம்மிடம் எந்த ஆவணமும் இல்லை. 

நீங்கள் கேட்ட கேள்வியில் இருந்து வேறொரு இடத்துக்கு வருகிறேன். சென்னை போன்ற பெருநகரங்கள் உருவாகும்போது, அதன் உருவாக்கத்துக்காகப் பங்களிக்கும் அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த நகரத்திலும் அப்படி வழங்கப்படுவதில்லை. 

சென்னை வளரும்போது அரசாங்கத்துக்கும் தனியார்களுக்கும் முதல் இரையானது திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து 3 தலைமுறைகளாக இங்கு கூலி வேலைப்பார்த்த மக்கள்தான். இப்போதும் சில இடங்களில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மார்க்சிய அமைப்புகள் இதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன. தோழர் செல்வாவின் போராட்டங்கள் மிக முக்கியமானவை. நான் அவரைக் குறித்து விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். 

ஒரு கதையை எழுதும்போது ‘பொலிட்டிகல் கரக்ட்னெஸ்’ என்று என்னவெல்லாம் பார்ப்பீர்கள்?

நான் தமிழில் எழுதுவதால் பிற மொழியைச் சேர்ந்தவர்களை இழிவாக எழுதிவிடக் கூடாது என்று நினைப்பேன். மொழி, இனம், மதம், தேசியம் சார்ந்த ஒருவனாக என்னை அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். 

சினிமா – இலக்கியம் என இரண்டு படைப்புத்தளங்களில் பணியாற்றுகிறீர்கள். ஏற்கெனவே உங்கள் எழுத்தில் திரைக்கதை பாணி இருப்பதாக விமர்சிக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் சினிமாவையும் இலக்கியத்தையும் எப்படி பேலன்ஸ் செய்கிறீர்கள்?

எழுத்து என் ஒருவனை மட்டும் சார்ந்தது. அதில் நான் எடுப்பது மட்டும்தான் முடிவு. என் கதைகளுக்கான விமர்சனங்களை நானே எதிர்கொள்கிறேன். ஆனால் சினிமா ஒரு கூட்டு உழைப்பு. அதில் தேவையான சமரசங்களைச் செய்துதான் ஆகவேண்டும். இவ்வளவு சமரசத்தோடு ஒரு வேலையைச் செய்ய வேண்டுமா என்றால்… ஆமாம் என்பதுதான் என் பதில்.

டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி

இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் வெவ்வேறு தளங்களில் செயலாற்ற வேண்டியிருக்கிறது. நான் நாளை ஒரு பாட்காஸ்டில் கதை சொல்லலாம், ஒரு அனிமேஷன் படம் செய்யலாம்… எனக்கு நிறைய ஆசைகள் இருக்கின்றன.

10 வருடங்கள் கழித்துப் புத்தகங்கள் படிக்க எத்தனைபேர் இருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் கதை கேட்கும் ஆசை இருக்கும். என்னை நான் அடுத்த தலைமுறைக்கு அப்டேட் செய்ய நினைக்கிறேன். 

டால்ஸ்டாயோ, தஸ்தயேவ்ஸ்கியோ இன்று இருந்திருந்தால் அவர்கள் நாவல் எழுதியிருப்பார்களா என்று தெரியாது. சினிமாதான் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சினிமாவுக்காக சமரசம் செய்யும்போது எழுத்தில் இருந்த சமரசம் இல்லாத லஷ்மி சரவணக்குமாரை மிஸ் செய்வீர்களா?

இல்லை. நான் 100 விஷயங்கள் சொல்ல நினைக்கும் இடத்தில் என்னால் 40 விஷயங்கள் சொல்ல முடிந்தாலே போதும். அடுத்ததாக செய்யும் விஷயத்தில் மீதியை சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அடுத்த விஷயத்தைச் செய்வதற்கு இப்போது செய்வதைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். 

லஷ்மி சரவணகுமார் – அரவாண் படப்பிடிப்பு தளத்தில்

இன்றைக்கு எழுதவரும் இளைஞர்கள் அனுபவங்களைவிட, வாசிப்பைவிட, காட்சி ஊடகங்களையே அதிகம் பார்க்கின்றனர். இந்த 2கே எழுத்தாளர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சில கதைகள் படிக்கும்போது கதை உலகம் புதுமையாக இருக்கிறது. ஆனால் அதிகம் குக் செய்யப்பட்டதாக இருக்கிறது. 1500 வார்த்தை எழுதினால்போதும் என கணக்கிட்டு எழுதியதைப் போல. 

நான் இன்று AI தொழில்நுட்பம் வழியாக எழுதுபவர்களைப் பார்க்கிறேன். அது கலையுணர்வைக் கொல்லும் செயலாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் தனிமனிதனாகக் கதை எழுதுவதற்கு ஆதாரம் இந்த உலகத்துக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் தானே. அந்த ஆர்வத்துக்கே இது துரோகம் செய்வதாகத் தெரிகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் வலி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு தேடல் இருக்க வேண்டும். 

மற்றொரு பக்கம் அறிவை வெளிப்படுத்தும் கதைகளாக, தன்னை இன்ட்டலெக்சுவலாக முன்னிறுத்துவதற்காக எழுதப்படும் கதைகளாக இருக்கின்றன. அப்படி ஓர் எழுத்தாளர் உருவாக முடியாது. அறிவு ஒரு தனித்துறை. கலை வேறொரு துறை. அறிவை கலையென்று குழப்பிக் கொள்பவர்களால் ஒருபோதும் நல்ல படைப்பைக் கொடுத்துவிட முடியாது.

அறிவு என்பது தெரிந்ததைச் சொல்வது (narration), கலை என்பது படைப்பது (creation). கலை கைகூட வேண்டுமானால் தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல் ஆகிய குணநலன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எழுத்தாளராக வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு வேலை செய்தால் அது உங்கள் முட்டாள்தனம் என்றுதான் கூறுவேன்.

சமீபத்தில் வெளியான சிறுகதைத் தொகுப்புகளில் உங்களுக்குப் பிடித்த சிலவற்றைக் குறிப்பிட முடியுமா?

‘பொற்பனையான்’ தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜா.தீபாவின் சமீபத்திய தொகுப்பு, பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘சீமூர்க்’ என்ற தொகுப்பு, அரபு மொழியில் இருந்து ஜாஹிர் ஹுசைன் மொழிபெயர்த்த நுண்கதைத் தொகுப்பு எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது.

இலக்கியத்தில் தனிமைக்கான இடம் அதிகம். ஆனால் சினிமாவில் People Management செய்துகொண்டே இருக்க வேண்டும். இதற்குத் தயாராக இருந்தீர்களா?

நீண்ட காலமாக சினிமாவில் இருப்பதனால் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனாலும் ஒரு உதவி இயக்குநராக தயாராக இருப்பதற்கும், இயக்குநராக தயாராக இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை இயக்குநரான பிறகுதான் உணர்ந்தேன். ஆரம்பத்தில் அது சரியாக வரவில்லை என்றாலும் இப்போது சமாளிக்க முடிகிறது என நம்புகிறேன்.

லஷ்மி சரவணகுமார்

சினிமாக்காரர்கள் புத்தகங்கள் படிக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறீர்களா?

இந்தக் கேள்வியே தவறானது. மனிதர்கள் எல்லோருமே படிக்க வேண்டும். அது அடிப்படையான ஒன்று. சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பதுபோல அதுவும் அடிப்படையானது.

இலக்கியத்தில் இருந்து சினிமாவுக்கு வருவதால் உங்கள் நாவல்களில் உள்ள பொதுச்சாயல் சினிமாவிலும் எதிர்பார்க்கப்படும். அது அப்படித்தான் இருக்குமா?

இப்போதுவரை எனக்கு எந்தத் தீர்மானமும் இல்லை. ஒரு வேட்டைக்காரன் இன்று இதைத்தான் வேட்டையாடுவேன் என்று முடிவு செய்துவிட்டு காட்டுக்குள் நுழைவதில்லை. அப்படித்தான் நானும் சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறேன். என்ன வேட்டை கிடைக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

சினிமா எடுப்பதும் ஒருவித சாகச விளையாட்டுதான். வெற்றி தோல்வியைப்பற்றி கவலைப்படாமல் ஒன்றரை மணிநேரம் ஜாலியாக விளையாடலாம். எனக்கு சினிமாவில் எந்த இலக்கும் இல்லை. ஆனால் எழுத்தில் இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் எழுத வேண்டிய கதைகள் இருக்கின்றன. அதற்காக சில நாவல்களை கைவிட்டிருக்கிறேன். 

எனக்கு 80 வயது ஆகும்போது நான் எழுத்தாளராக இருப்பேன். ஆனால் சினிமாக்காரனாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை. உடல் வேலை செய்யும்வரைதான் சினிமா. வாழ்நாள் முழுவதும் எழுத்தாளர்தான்.

lingam

இதே கேள்வி சினிமா என்பதற்கு பதில் லிங்கம் என வைத்துக்கொண்டால்….

ஓர் எழுத்தாளராக இவ்வளவு எழுதிய பிறகு சினிமாவிலும் கேங்ஸ்டர் ஸ்டோரி பண்ண வேண்டுமா என்று ஒரு குழப்பம் இருந்தது. லிங்கம் கதைக்குப் பின்னால் இருக்கிற குடும்ப உணர்வுகள் மதிப்பு வாய்ந்ததாக இருந்தன. அதுதான் என்னை கன்வின்ஸ் செய்தது. திரைக்கதை எழுதும்போதே சுவாரஸ்யமாக இருந்தது. பொறுத்திருந்து பார்ப்போம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.