மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக மிரட்டல் அழைப்பு ஒன்று பந்த்ரா காவல்நிலையத்தின் தொலைப்பேசி எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. ஷாருக் கான் ரூ.50 லட்சம் பணம் கொடுக்கவேண்டும்; தவறினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மும்பை போலீஸார், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிஎன்எஸ் பிரிவுகள் 308(4) மற்றும் 351 (3)(4) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மிரட்டல் அழைப்புகளைக் கொடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து நடிகர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
மிரட்டல் அழைப்பு சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஃபைசான் கான் என்ற நபரின் அழைப்பேசி மூலம் மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ராய்பூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய மாதங்களில் இதே போன்ற தொடர் மிரட்டல்கள் சக பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கும் விடுக்கப்பட்டது. அக்.30-ம் தேதி இதேபோன்ற ஒரு கொலை மிரட்டல் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்கப்பட்டது.
இதனிடையே நடிகர் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகனும் என்சிபி எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் முகம்மது தைய்யப் அல்லது குர்ஃபான் கான் என்பது தெரியவந்துள்ளது. அவர் நொய்டாவின் செக்டார் 39ல் கைது செய்யப்பட்டார்.