வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு விரிவடையும் என்றாலும், இறக்குமதி, வரிகள் மற்றும் குடியேற்றம் போன்ற சில விவகாரங்களில் அமைதியின்மை இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். மோடி, ட்ரம்ப் இடையே ஆழமான நட்பு இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான கடினமான விவகாரங்களும் சுமுகமாக தீர்க்கப்படும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, டொனால்டு ட்ரம்ப், “வெளிநாட்டுப் பொருள்களுக்கு, குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக கட்டணங்கள் விதிக்கப்படும். ஒரு மிகப் பெரிய நாடு கடத்தும் திட்டத்தை வடிவமைத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்திருந்தார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ட்ரம்பின் வெற்றி உறுதியான சில மணி நேரங்களில், “குடியரசுக் கட்சியின் முன்னணி பிரமுகர்கள், பழமைவாத அறிவுஜீவிகள், 21-ம் நூற்றாண்டை வடிவமைப்பதில் இந்தியா – அமெரிக்காவின் எதிர்கால உறவு முக்கியப் பங்கு விகிக்கும் எனக் கருதினர்” என்று கேபிடல் ஹில்லின் மூத்த மற்றும் தகவல் தொடர்பு வியூக வகுப்பாளர் அனாங் மிட்டல் தெரிவித்திருந்தார். அனாங் மிட்டல் மேலும் கூறுகையில், “டொனால்டு ட்ரம்ப், பிரதமர் மோடியுடனான தனது தனிப்பட்ட உறவின் மூலமாகவே இந்திய – அமெரிக்க உறவை அணுகுவார்.
மேலும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நேரடி அந்நிய முதலீடு போன்றவற்றில் இரு தரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படலாம். இந்தோ – பசிபிக் கூட்டாளிகளிடத்தில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை உருவாக்குவதே ட்ரம்பின் முதன்மையான நோக்கமாக இருக்கும். அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் ஆளுமையை கட்டுப்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கிறார். சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைவர்களுடனான ட்ரம்பின் நெருக்கம் சாதகமானதாகவே இருக்கும். அவர்கள் இந்தியச் சந்தையை விரிவுபடுத்துவதையும், இந்திய நுகர்வோர் தளத்தையும், அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் மனித மூலதனத்தை விரிவடையச் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு ட்ரம்ப் ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு செல்லும்போது பலதரப்பட்ட கூட்டங்களில், ஏதாவது ஒன்றில் நேரடி சந்திப்புகள் நடைபெறும். 2025-ல் ட்ரம்ப் இந்தியா செல்வார் அல்லது மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம். குடியேற்றம், வர்த்தகப் பற்றாக்குறை அல்லது இந்தியா – கனடா இடையேயான தூதரக உறவுகளில் விரிசல் என சிறு சிறு சிக்கல்கள் இருந்தபோதிலும் இந்திய – அமெரிக்க உறவு தொடர்ந்து விரிவடையும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே ட்ரம்பின் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களில் முக்கியமானவர் பிரதமர் மோடி. அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள என் நண்பர் டொனால்டு ட்ரம்புக்கு இதயபூர்வமான வாழ்த்துகள். உங்களுடைய முந்தைய பதவிக்காலத்தைப் போலவே, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன். நம் இருநாட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
குடியேற்றம் மற்றும் கட்டணங்கள் போன்றவை மீதான ட்ரம்பின் கடினமான கொள்கைகள் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், இவற்றில் அமெரிக்காவுடன் இந்தியா சில கடினமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டி இருக்கும் என்கின்றனர். ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், இந்திய – அமெரிக்க உறவு பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பங்கள், வர்த்தகம் மற்றும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்றம் கண்டிருந்தன. எனினும், சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் வைத்து கொல்வதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றசாட்டில் கொஞ்சம் அழுத்தம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பன்னுனை கொல்லும் சதித் திட்டத்தில் இந்தியாவின் அரசு ஊழியருடன் இணைந்து இந்தியரான நிகில் குப்தா பணியாற்றினார் என்று அமெரிக்க பெடரல் வழங்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் உள்ள குற்றச்சாட்டை சரிசெய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
கிரீன் கார்டு சிக்கல்: அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குழந்தைகளுக்கான தானியங்கி குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் அமல்படுத்தப்படவுள்ள குடியுரிமையை நன்கு கூர்ந்து கவனித்தால், அவரது அந்த உத்தரவு சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளுக்கு மட்டுமானதாக முடிந்துவிடாது. அது மேலும் பலரை பாதிக்கும்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவைஏற்படுத்தும். அத்துடன், 10 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு அவர்களுக்கு பாதகமாக அமையும். எனினும், ட்ரம்ப்பின் இந்தத் திட்டம் அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தை மீறுவதால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி – ட்ரம்ப் நட்பு: டொனால்டு ட்ரம்ப் – நரேந்திர மோடி இடையிலான உறவு, வலுவான ராஜதந்திர உறவுகள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படையான தனிப்பட்ட அரவணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. பிரதமர் மோடி, டொனால்டு ட்ரம்ப் ஆகிய இரு தலைவர்களும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த முன்னுரிமை அளித்தனர். குறிப்பாக பயங்கரவாதத்தை எதிர்கொள்வதிலும், பாகிஸ்தானால் முன்வைக்கப்படும் பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதிலும் முன்னுரிமை அளித்தனர்.
சுதந்திரமான இந்தோ – பசிபிக் தொடர்பான அவர்களின் பார்வை நெருக்கமான ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது. கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் குவாட் கூட்டணியில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை ஆழமாக்கியது. 2019-ல் ஹவுடி மோடி, 2020-ல் நமஸ்தே ட்ரம்ப் போன்ற நிகழ்ச்சிகள் இரு தலைவர்களின் தனிப்பட்ட நெருக்கத்தை காட்டியது. இந்த நிகழ்வுகள் அவர்களின் பரஸ்பர நட்புறவை வெளிப்படுத்தியது. ராஜதந்திர உறவை வலுப்படுத்த உதவியது.
வரி விகிதம் மீதான கருத்து வேறுபாடுகள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இரு தலைவர்களின் ஒத்துழைப்பு சுகாதார திட்டங்களுக்கும் விரிவடைந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.