‘‘திமுகவை அழிக்க பலர் கிளம்பி வந்துள்ளனர்; அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’’ – உதயநிதி 

தஞ்சாவூா்: “திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்,” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “நான் துணை முதல்வராக வரவேண்டும் என்ற முதல் குரல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதன் பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். நவம்பர் மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் என்பார்கள். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். கருணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் நின்று வென்றார். தஞ்சாவூர் மண்ணில் அவர் கால் படாத இடமே கிடையாது. முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன் தான் என்ற பெருமையோடு இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் புள்ளிவிவரமும் கூறியுள்ளது. திராவிடம் மாடல் ஆட்சியை பின்பற்றித் தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகின்றன. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பேருந்து பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் . மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றி சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள் . அவர்களுக்கு முதல்வர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதியான நிலையில் உள்ளனர் .

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2-வது முறையாக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார். 7-வது முறையாக திமுக ஆட்சி அமையும். தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நிறைவேறும் . குறிப்பாக நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அது நிறைவேறியது. அதன் பின்னர் அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதல்வராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது. அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல் அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள்.” என தெரிவித்தார்.

முன்னதாக, தஞ்சாவூரில் இன்று நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக எம்பி ச.முரசொலி தஞ்சாவூர் வீணையை பரிசாக வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.