நவ.25-ல் குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்: வக்பு, ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்' மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அப்போது வக்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடை பெறும். இதற்காக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையை கூட்ட மத்திய அரசு பரிந்துரைத்தது. அதை ஏற்று நாடாளு மன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றத்தின் சம்விதான் சதான் மத்திய அரங்கில் இதற்கான விழா அன்று கொண்டாடப்படுகிறது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.

கூட்டுக்குழு ஆய்வு: இந்த கூட்டத் தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதா மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளது. வக்பு மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் உள்ளது.

இந்த குழு பல கூட்டங்களை நடத்தி கருத்துகளை கேட்டறிந்து வரு கிறது. வரும் 29-ம் தேதி இக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அதன்பிறகு வக்பு வாரிய மசோதா அவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்த மசோதாவும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தால் கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சி கள் தயாராக உள்ளன.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் இந்தியா வலுப்பெறும். வளர்ந்த நாடாக இந்த நடவடிக்கை உதவும். இந்திய ஜனநாயகம் வலுப்பெறும். தேர்தல் செலவுகள் குறையும், நேரம் மிச்சமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கூறி வருகிறார்.

அதேநேரத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த 2 முக்கிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் போது நாடாளுமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.