சென்னை: கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போஜராஜன் நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக் குழு சார்பில் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
குடிபெயரும் மக்கள்: கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு, வருமானம் இல்லாத சூழலில், எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என நகர்ப்புறத்தை நோக்கி வரும் மக்கள் அடிப்படை வசதிகளின்றி இங்கு நரக வாழ்க்கை வாழக்கூடிய நிலை உள்ளது.
இலவச குடிமனைப் பட்டா கேட்டு மனு அளிக்க ஏராளமான பெண்கள் திரண்டுள்ளனர். இவர்கள் இதுவரை எத்தனை மனுக்கள் அளித்திருப்பார்கள்? மனு அளித்து, மனு அளித்து ஓய்ந்துபோன நிலையில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கி, சென்னையில் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு உடனடியாக இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போஜராஜன் நகரில் அமைக்கப்படும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் மட்டும் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஒரு சுரங்கப்பாதை அமைக்க 13 ஆண்டுக்காலம் தேவையா?. சாதாரண மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் பணிகள் என்றாலே அதற்கு போதுமான கவனம் செலுத்துவதில்லை.
குடியிருப்புகளின் தரம் ஆய்வு: மூலக்கொத்தளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.