“மஞ்சக்கொல்லை சம்பவத்தை பிரச்சினையாக மடைமாற்ற பாமக முயற்சி” – திருமாவளவன்

புவனகிரி: “கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் பாமக மற்றும் விசிக கொடிக்கம்ப பீடங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினையை இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சினையாக மடைமாற்ற பாமகவினர் முயற்சிக்கின்றனர்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து தொல்.திருமாவளவன் கூறியது: “புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப் பதிவை தவிர்த்தனர். இந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 15-ம் தேதி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. அதன் மீது புகார் அளித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தச் சூழலில் தான் நவம்பர் 1-ம் தேதி உடையூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் மஞ்சக்கொல்லை மற்றும் வாண்டையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுமார் 6 பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது பட்டியலின பகுதியைச் சேர்ந்தவர்கள் அதைத் தட்டிக் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் தப்பியோடிய நிலையில் இருவர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதற்கு முன்பு நடைபெற்ற கொடிக்கம்பம் அகற்றும் விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் கொடிக்கம்ப விவகாரத்தை இரு சமூகத்தினர் இடையே நிலவும் பிரச்சினையாக மடைமாற்ற பாமகவினர் முயற்சி செய்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

பட்டியலினத்தவரும் வன்னிய சமுதாயத்தினரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்து வருகின்ற சூழலில் தமிழகம் முழுவதும் பதற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். மேலும் மஞ்சக்கொல்லையில் பாமகவும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில், என்னை ஒருமையில் தரக்குறைவாக பேசியதோடு, வன்னியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக மதுப்பழக்கம் இருப்பதால் தமிழக முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த உண்மைகளை பேசாமல் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்மத்தை தூண்டிவிடுவது அதிர்ச்சி அளிக்கிறது,” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது விழுப்புரம் மக்களவை உறுப்பினர் டி.ரவிக்குமார் மற்றும் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ-வான சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.