பெங்களூரு: இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் ரூ. 5 கோடி தராவிட்டால் அவரை சுட்டு கொன்றுவிடுவோம் என மிரட்டிய நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானின் மேலாளரை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது தன்னை பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், ரூ.5 கோடி தராவிட்டால் சல்மான் கானை, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை போல சுட்டுக்கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சல்மான் கான் தரப்பில் நவி மும்பை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், செல்போன் எண்ணைக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை கர்நாடக மாநிலம் ஹாவேரியை சேர்ந்த பிகாராம் (33) என்பவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
இதுதொடர்பாக நவி மும்பை போலீஸார் கர்நாடக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் பிகாராமை கர்நாடக போலீஸார் நேற்று முன்தினம் மாலை ஹூப்ளியில் கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்த அவர் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு தங்கி, கூலி வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை நவி மும்பை போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் ஒருவர் கூறும்போது, ‘‘பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது போல தெரியவில்லை. அவரது சகோதரர் என பொய் கூறியுள்ளார். தனது நண்பர்களிடம் சவால் விட்டு, தவறாக செல்போனில் பேசிவிட்டதாக கூறினார். இருப்பினும் போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
ஷாருக் கானுக்கு மிரட்டல்: இந்தி நடிகரான ஷாருக் கானை தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்ட மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது மும்பையின் பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.