வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 2-வது முறையாக அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியின் இப்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
உதாரணமாக சிறிய மாகாணமான நெவாடாவில் 3, பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதுபோல நாடு முழுவதும் 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
இந்நிலையில் திட்டமிட்டபடி, 50 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் முன்னிலை வகித்தார்.
நேற்று இரவு நிலவரப்படி, ட்ரம்புக்கு 277 இடங்கள் கிடைத்தன. அதேநேரம் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு 224 இடங்களே கிடைத்தன. மீதம் உள்ள பெரும்பாலான இடங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகித்தார்.
அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 மாகாணங்களிலும் ஆதரவு: அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்கள் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. அந்த வகையில், இந்த தேர்தலில் பென்சில்வேனியா, நார்த் கரோலினா, விஸ்கான்சின் மற்றும் ஜார்ஜியா ஆகிய 4-ல் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மற்ற 3 மாகாணங்களிலும் அவர் முன்னிலை வகித்தார். கடந்த தேர்தலில் 6-ல் ஜனநாயக கட்சியும் 1-ல் குடியரசு கட்சியும் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ஜன.20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பார்.
பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள என் நண்பர் டொனால்டு ட்ரம்புக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். உங்களுடைய முந்தைய பதவிக்காலத்தைப் போலவே, இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன். நம் இருநாட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுபோல பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரும் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உயிரை காத்த இறைவன்: புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மாநாட்டு மையத்தில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க மக்களுக்கு இது மகத்தான வெற்றி. இந்த நேரத்தில் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என் உயிர் உள்ளவரை உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் போராடுவேன். கடந்த 4 ஆண்டுகளாக நிலவிய பிரிவினையை பின்னுக்கு தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான நேரம்.
இந்த தேர்தலில் வெற்றிக்காக பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வேன்ஸ், என் மனைவி மெலனியா, என் பிள்ளைகள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என் வெற்றிக்காக முழு ஆதரவை வழங்கிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி. அவர் ஒரு அறிவாளி. நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகள்.
என்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக இறைவன் என் உயிரை காப்பாற்றினார் என பலர் என்னிடம் தெரிவித்தனர். நாட்டைக் காப்பாற்றவும் அமெரிக்காவை மகத்தான நிலைக்கு கொண்டு செல்லவும்தான் இறைவன் என் உயிரைக் காப்பாற்றினார். இப்போது நாம் இணைந்து அந்தப் பணியை நிறைவேற்றப் போகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.