EICMA ஷோவில் ஹீரோவும் தன் அதகளத்தைக் காட்டிவிட்டது. எக்ஸ்பல்ஸ் 200 பைக்கைப் பார்த்தாலே யாருக்கும் ராலியிலோ அல்லது ஏதாவது அட்வென்ச்சர் பந்தயத்திலோ கலந்து கொள்ள வேண்டும்போல் சட்டெனத் தோன்றும்.
எக்ஸ்பல்ஸ் 200 இப்போது லிக்விட் கூல்டு இன்ஜின் செட்அப்புடன் வந்திருப்பதால், காலில் சூடு அடிக்கும் என்கிற கவலை இல்லை. சிங்கிள் சிலிண்டர் செட்அப்தான். மற்றபடி எல்லாமே 4; அதாவது 4 வால்வுகள், 4 ஸ்ட்ரோக்குகள். இதன் கொள்ளளவு 210 சிசி. கரீஸ்மா பைக் உங்களுக்குத் தெரியும்தானே! அதன் இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. இதன் பவர் 24.6hp@9,250rpm. டார்க் 20.7Nm@7250rpm. இதன் பிக் அப் வேற லெவலில் இருக்கும்.
கேடிஎம் 390 போன்ற பெரிய பைக்குகளில் இருப்பதைப் போல், முன் பக்கம் 21 இன்ச்சும், பின் பக்கம் 18 இன்ச் வீல்களும் கொடுத்திருந்தார்கள். ஏன் இதை சுத்தமான ராலி பைக் என்று சொல்கிறேன் என்றால், அந்த ஒரு விஷயமே போதும்! இதன் சஸ்பென்ஷன் டிராவல் முன் பக்கம் 210 மிமீ. எம்மாடியோவ்! பின் பக்கமும் பெரிதாகவெல்லாம் குறையவில்லை. 205 மிமீ. நிச்சயம் ஓட்டுதலில் அத்தனை சொகுசு இருக்கும். வாவ்! இப்போது இந்த சஸ்பென்ஷன் செட்அப்பில் அட்ஜஸ்டபிள் வசதி கொடுத்திருக்கிறார்கள். இதுதான் அட்வென்ச்சர் விரும்பிகள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். டேஷ்போர்டில் 4.2TFT ஸ்க்ரீன் இருக்கிறது. ஸ்விட்சபிள் ஏபிஎஸ் வசதி கொடுத்திருக்கிறார்கள்.
இதன் எடை ஏற்றப்பட்டிருக்கிறது. 170 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை நீங்கள் ஆஃப்ரோடு செய்ய வேண்டுமென்றால், நீங்கள் ஒரு பல்க்கி பார்ட்டியாக இருக்க வேண்டும். இதன் பெட்ரோல் டேங்க் அப்படியே ஒரு மாதிரி உயரமாக வடிவமைத்திருப்பது வித்தியாசமாகவே இருக்கிறது. சீட் சிங்கள் சீட்தான்; ஆனால் ஃப்ளாட்டாக இல்லை. ரைடர் ஓட்டுதவற்கு வாகாக இறக்கமாக, கிச்செனப் பிடித்து ஓட்டுவதுபோல் இதன் டிசைன் இருக்கிறது. அதே வட்டவடிவ ஹெட்லைட்தான். பைக்கின் முன் பக்கம் இருக்கும் ஷ்ரெளடுகள் (Shrouds) அழகு மட்டுமில்லை; ஃபங்ஷனலும்கூட! ஒரு பக்கம் மட்டும் ஆஃப்செட் ரேடியேட்டர் கொடுத்திருக்கிறார்கள்.
பழைய எக்ஸ்பல்ஸுக்கு ரீப்ளேஸ்மென்ட்டாக இது இருக்காது. அதோடு சேர்த்து இதுவும் விற்பனையில் இருக்கும். என்னைக் கேட்டால் அட்வென்ச்சர் பைக்குகளில் ஏழைகளின் நண்பன் என்பேன் இதை நான்! காரணம், இந்த செக்மென்ட்டில் விலை குறைந்த ADV பைக் ஹீரோ எக்ஸ்பல்ஸ்தான். அந்தப் பேரைக் காப்பாத்துவீங்களா ஹீரோ?