சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதையொட்டி இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் மும்முரமாகியிருக்கின்றனர் சூர்யா மற்றும் ‘கங்குவா’ படக்குழுவினர். இன்று (நவம்பர் 7) இப்படத்தின் ‘3டி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல் ஹாசனின் பிறந்த நாளான இன்று ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாவது கூடுதல் ஸ்பெஷலாக சூர்யாவிற்கு அமைந்திருக்கிறது. இந்நிலையில் கமல் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் சூர்யா.
இதுகுறித்து பேசியிருக்கும் சூர்யா, “இன்னைக்கு என்னோட சகலகலா வல்லவன், உலக நாயகன் கமல் சாரோட பிறந்த நாள். நான் இன்னைக்கு சினிமாவுல இருக்க முக்கியமான காரணம் அவர்தான். 1980ம் ஆண்டு ‘ராஜ பார்வை’ படம் வந்தது. அந்தப் படம் வணிக ரீதியாகச் சரியாக வெற்றி பெறவில்லை. ஆனால், உடனே இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ நடிச்சார். 1981ம் ஆண்டில் அதுதான் முதல் பேன் இந்தியன் சினிமா என்று நினைக்கிறேன்.
அதே ஆண்டு ‘மூன்றாம் பிறை’. அடுத்தடுத்து ‘நாயகன்’, ‘சத்யா’, ‘பேசும் படம்’ நடிச்சார். ஒரே ஆண்டில் ‘சிங்கார வேலன்’, ‘தேவர் மகன்’ படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய பிரச்னைகள். ஆனால், சினிமாவின் மீது கொண்ட தீராக் காதலால் விடாமல் நடித்தார்.
2018ம் ஆண்டு ‘வாரணம் ஆயிரம்’ படத்தை கமல் சாரிடம் போட்டுக் காட்டினேன். அப்போது அவர் பத்து வேடத்தில் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவருக்கு ஐம்பது வயதைக் கடந்திருக்கும். ஆனாலும், சினிமாவின் மீது கொண்ட தீராக் காதலால் தொடர்ந்து புதுமையாக நடித்துக் கொண்டிருந்தார்.
பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தியவர். ஆனால் கற்றுக் கொள்வதை அவர் ஒருபோதும் நிறுத்திக் கொண்டதில்லை. பல மொழிகளில் பேசுபவர், நம் நாட்டின் பெருமை மிகுந்த நடிகர். பயணிப்பது எளிது, பாதை போட்டுத் தருவது அவ்வளவு எளிதல்ல. கமல் சார் நமக்கெல்லாம் பாதை போட்டுத் தந்தவர். அவர் இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியமாக, நம்முடன் இருக்க வேண்டும்” என்று கமல் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…