‘தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைகின்றனவா?’ என மாவட்டவாரியாகக் கள ஆய்வு செய்யவிருப்பதாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின், அதன்படி கடந்த 5-ம் தேதி கோவைக்குச் சென்றார். அங்கு அரசு சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்திய அவர், கூடவே தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். “இதேபோல தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஆய்வுக்குச் செல்லும் முதல்வர், அந்தந்த மாவட்ட தி.மு.க-வினருடன் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் உரையாடவிருக்கிறார்.
ஒரு பக்கம் மக்கள் தேவையையும், இன்னொரு பக்கம் உட்கட்சிப் பிரச்னைகளையும் கேட்டறிந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரிசெய்துவிட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார் முதல்வர். எனவே, முதல்வரும், அவர் செல்ல முடியாத மாவட்டங்களுக்குத் துணை முதல்வரும் அடுத்தடுத்துப் பயணமாகவிருக்கிறார்கள்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
2026 தேர்தலில் எப்படியும் வென்று, சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று தீயாக வேலை செய்கிறாராம் சீமான். அதற்காக தென்மாவட்டத்தில் ஒரு தொகுதியைத் தேர்வுசெய்யவும் முடிவெடுத்திருக்கிறாராம் அவர். கூடவே, இந்தத் தேர்தலில் எக்காரணம் கொண்டும் கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்துவிடக் கூடாது என, கட்சி வீக்காக இருக்கும் நகர்ப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது நா.த.க. முக்கியமாக திரை நட்சத்திரங்கள், `பிக் பாஸ்’ பிரபலங்களைக் கட்சியில் சேர்த்து, அவர்களைத் தலைநகரில் வேட்பாளர்களாகக் களமிறக்குவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறதாம் தலைமை.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் குழுவுக்குள் உரசல் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே அந்தக் குழுவின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒதுங்கிவிட்ட நிலையில், குழுவிலுள்ள கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜும் தற்போது ஒதுங்கத் தொடங்கியிருக்கிறாராம். சமீபத்தில், மருது சகோதரர்கள் குருபூஜைக்காக சிவகங்கைக்கு பன்னீர் சென்றபோதுகூட மருது அழகுராஜ் அவருடன் செல்லவில்லை.
இது குறித்து விசாரித்தால், ‘தென்மாவட்ட உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலாளர்களில் கணிசமானோர் மருது அழகுராஜுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஒன்றிணைவதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு இல்லை என்ற அதிருப்தியில் இருக்கும் அவர்கள், விரைவிலேயே மருது அழகுராஜ் தலைமையில் ஒன்று கூடி, ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக முக்கிய முடிவெடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்” என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
அ.தி.மு.க-வின் கோட்டையாக இருக்கும் மாம்பழ மாவட்டத்தை தி.மு.க வசப்படுத்தும் முயற்சியாகவே, அங்கிருக்கும் ஒரே தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது தலைமை. ஆனால், கட்சியை வலுப்படுத்தும் கடமையை மறந்துவிட்டு, அமைச்சர் பதவி தரும் சுகத்திலேயே ஆழ்ந்துவிட்டாராம் அந்த அமைச்சர். கூடவே அவருடைய ஆதரவாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் சிலரின் ஆட்டமும் அதிகரித்துவருகிறதாம். “இதுக்கா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாங்க?” எனப் புலம்பும் தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் இது குறித்து முதல்வருக்குப் புகார் அனுப்பத் தயாராகிவருகிறார்களாம்.
பா.ஜ.க-வில் உட்கட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதில், அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, சில சீனியர்கள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்களாம். அதற்காக, அண்ணாமலையின் ஆதரவாளர்களாக அறியப்படுபவர்களின் நாடாளுமன்றத் தேர்தல் நேரச் செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை பங்களிப்பு தொடங்கி அவர்கள்மீது ஏதேனும் குற்ற வழக்கு பதிவாகியிருக்கிறதா என்பதுவரை தோண்டியெடுத்து, அவற்றை டெல்லி மேலிடத்துக்கும், ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் அனுப்பத் தொடங்கியிருக்கிறார்களாம்.
“தேர்தல் வருவதற்கு முன்பே ஓரங்கட்டுவதா?” எனக் கடுப்பானவர்கள் அண்ணாமலைத் தரப்பில் புகாரளித்திருக்கிறார்கள். ஆனால், “உட்கட்சித் தேர்தல், ஒருங்கிணைப்புக்குழு, தேசியத் தலைமையின் கண்காணிப்பில்தான் நடைபெறுகிறது. எனவே, எங்களால் எதுவும் செய்ய முடியாது. இது தொடர்பாக லண்டனில் இருக்கும் அண்ணாமலைக்குத் தெரிவிக்கிறோம்” என பதில் சொல்ல, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்களாம் மலையின் ஆதரவாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb