சென்னை / திருவாரூர்: ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, சென்னையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற சில மாவட்டங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், காஷ்மீர் முஸ்லிம்களை அவதூறு செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சில முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், இந்த அமைப்புகள் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பின்னர், சென்னையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி, அண்ணாநகர், கோயம்பேடு, தியாகராயநகர், பரங்கிமலை, கீழ்ப்பாக்கம் உட்பட சென்னையில் ‘அமரன்’ திரைப்படம் ஓடும் அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு திரையரங்குக்கும் 10 போலீஸார் வரை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர்.
சில திரையரங்குகளில் படம் பார்க்க வந்த ரசிகர்கள், போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல சில இடங்களில் திரையரங்கு இருக்கும் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 46 தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிலைமை சீராகும் வரையில் நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவாரூரில் பரபரப்பு: ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் திருவாரூரில் நடத்திய போராட்டத்தில் நடிகர் கமல்ஹாசனின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் தைலம்மை திரையரங்கு முன்பு வெள்ளிக்கிழமை எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவர் விலாயத் உசேன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ‘அமரன்’ திரைப்படம் காஷ்மீரில் உரிமைக்காக போராடிய மக்களை தவறாக சித்தரிப்பதாகவும், தொடர்ச்சியாக நடிகர் கமல்ஹாசன் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்ற சித்தரித்து புண்படுத்தி வருவதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைக்கான முழக்கமாக ‘ஆசாதி’ (சுதந்திரம் / விடுதலை) என்பதை முன்வைக்கின்றனர். ஆனால், ‘அமரன்’ படத்தில் அதை ஏதோ தீவிரவாத, பயங்கராவாத முழக்கமாகவும், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முழக்கமாகவும் காட்சிப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே கமல்ஹாசனின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உருவப் படத்தை எரித்ததால் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் எஸ்டிபிஐ கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
எதிர்ப்பு ஏன்? – ஜவாஹிருல்லா விளக்கம்: திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “அமரன் திரைப்படம் மிக மோசமாக ஒரு மாநிலத்தின் உரிமைக்காக போராடக் கூடியவர்களை சித்தரித்து இருக்கிறது. காஷ்மீரின் உண்மை நிலையை அந்தப் படம் எடுத்துக்காட்ட தவறி இருக்கிறது.
அந்தப் படத்தின் நாயகன் முகுந்தன் தியாகத்தை போற்றுகிறோம். நிச்சயமாக அவர் ஒரு மாவீரன்தான். ஆனால், தமிழ்நாட்டை சார்ந்த ஏராளமானோர் கார்கில் யுத்தத்திலும் சரி, அதே போன்று இன்னும் பிற யுத்தங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சார்ந்த சிறுபான்மையினத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லாம் தங்களது வீரர்களையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமரன் படத்தின் நாயகி பெறக்கூடிய துன்பங்களுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. தன்னுடைய கணவன் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பதை அறியாமல் வாழக்கூடிய காஷ்மீர் பெண்களுடைய நிலை உள்ளது. ஆக, ஒரு பக்கம் சார்பாக இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்” என்றார்.