'உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும்' – ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ,

ரஷியாவில் உள்ள சோச்சி நகரத்தில் நடைபெற்ற வால்டாய் பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ரஷிய அதிபர் புதின், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் பேசியதாவது;-

“ரஷியா அனைத்து வழிகளிலும் இந்தியாவுடன் உறவுகளை வளர்த்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் அதிக நம்பிக்கை உள்ளது. அதிவேக பொருளாதார வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம், வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் மற்றும் ஒன்றரை பில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தியா, வல்லரசு நாடுகளின் பட்டியலில் சந்தேகத்திற்கு இடமின்றி சேர்க்கப்பட வேண்டும்.

இந்தியா ஒரு சிறந்த நாடு. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியா-ரஷியா இடையிலான ஒத்துழைப்பு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை மட்டும் செய்யவில்லை, நாங்கள் அவற்றை ஒன்றாக வடிவமைக்கிறோம்.

இந்திய ஆயுதப் படைகளிடம் எத்தனை வகையான ரஷிய ராணுவ உபகரணங்கள் பயன்பாட்டில் இருக்கிறது உள்ளன என்பதைப் பாருங்கள். இந்த உறவில் ஒரு பெரிய அளவிலான நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை காற்று, கடல் மற்றும் நிலம் ஆகிய மூன்று சூழல்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உருவாக்கினோம். இந்தியாவின் பாதுகாப்புக்காக இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லையில் சில சிக்கல்கள் உள்ளன. புத்திசாலியான, திறமையான தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, சமரசமான முடிவுகளை தேடுவார்கள், இறுதியில் அதை கண்டுபிடிப்பார்கள்.”

இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.