எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் என்றால்… அரசும் அதிகாரிகளும் எதற்கு?

‘கால் வைத்த இடமெல்லாம் கன்னி வெடி’ என்று சொல்வதுபோல், பொதுவெளி மற்றும் இணையவெளி என எங்கு பார்த்தாலும் விதவிதமாக… வகை வகையாக நிதி மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. எம்.எல்.எம் என்ற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், காந்தப்படுக்கை, ஈமு கோழி என ஆரம்பித்து, சமீபத்தில் பூதாகரமாக வெளிவந்த ஆருத்ரா, நியோமேக்ஸ் வரை பட்டியல் நீள்கிறது. மோசடிகள் வெடித்து வெளிச்சத்துக்கு வந்தாலும், அடுத்தடுத்து புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் மோசடிப் பேர்வழிகள்.

அதற்கு முக்கியக் காரணம், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை கடுமையான தண்டனைகள் கிடைக்கவே இல்லை என்பதுதான். இத்தகைய மோசடிப் பேர்வழிகளுக்கு அரசுத்துறை மற்றும் காவல்துறையினரே ‘தோழர்’களாக இருக்கும்போது, எப்படி தண்டனைகளை எதிர்பார்க்க முடியும்? மக்களுக்கான நீதி எப்படி கிடைக்கும்?

ஒவ்வொரு முறையும் மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும்போதும் அரசுத்துறை, வங்கித்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் உடந்தையாக இருப்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது. தற்போது வெளிவந்திருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ என்ற திரைப்படம்கூட இவற்றையெல்லாம் பட்டவர்த்தனமாகவே வெளிச்சமிட்டிருக்கிறது. இத்தகைய மோசடிகள் குறித்து, இப்போது நேரடியாகவே காவல்துறைக்கு எதிராக சாட்டை வீசியிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

‘2020-ல் ஆன்மிக சுற்றுலாவுக்கு விசா பெற்றுத் தருவதாகச் சொல்லி சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் என்பவர், ரூ.13 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்’ என்று வேலூரைச் சேர்ந்த மனோகர்தாஸ் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்ததோடு சரி, இதுவரையிலும் காவல்துறை நடவடிக்கையே எடுக்கவில்லை.

மனோகர்தாஸ், உயர் நீதிமன்றப் படியேறினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, “மோசடிகள் தொடர்கின்றன. இதுபோல் பதிவாகியுள்ள பல நூறு மோசடி வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் நிலுவையிலேயே வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. இது மிகவும் வேதனையைத் தருவதாக இருக்கிறது” என்று சாடியுள்ளார்.

அரசோ, பொருளாதாரக் குற்றப்பிரிவோ, காவல்துறையோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை என்பதற்குச் சான்றுதான், நீதிபதியின் இந்தச் சாடல். அரசின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்துதான் நீதிமன்றத்தை நாடுகிறார்கள் மக்கள். அதிலும் வழக்குகளுக்குச் செலவு செய்ய பண வசதியும் நேரமும் இருப்பவர்கள்தான் இப்படி நீதிமன்றத்தை நாடமுடிகிறது. மற்றவர்களின் நிலை?

பொருளாதாரக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வது, மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது என, தான் செய்ய வேண்டியவற்றை செய்யவே இல்லை எனும்போது… இந்த அதிகாரிகளும் அரசாங்கமும் நமக்கு எதற்கு?

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.