மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர் ஜி கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும், மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கக் கோரியும் பயிற்சி மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கறிஞர் ஒருவர் “அதிகாரமிக்கவர்கள் குறுக்கீடு செய்து திசை திருப்பும் சூழல் உள்ளதால், இவ்வழக்கை மேற்கு வங்கத்திலிருந்து வேறொரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “சில அரிதான வழக்குகளில்தான் வழக்கு விசாரணையை வேறுமாநிலத்துக்கு மாற்றுகிறோம். மணிப்பூர் வழக்கை அவ்வாறு மாற்றினோம். ஆனால், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது” என்று தெரிவித்தார்.
மற்றொரு வழக்கறிஞர் “இந்த வழக்கில் சிபிஐ முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டதற்கு, “இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையென்றால், அதற்கு உத்தரவிடும் அதிகாரம் கீழமை நீதிமன்றத்துக்கு உள்ளது. கீழமை நீதிமன்றத்தின் அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடாது” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.